'த்ரிஷ்யம் 3' படத்தின் பணிகள் குறித்து தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர் பேசியுள்ளதை அடுத்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படம் தமிழ், கன்னடம், இந்தி உட்பட பல்வேறு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு அந்தந்த மொழிகளிலும் தொடர் வெற்றிகளைப் பெற்றது. தமிழில் கமல்ஹாசன், கௌதமி நடிப்பில் பாபநாசம் என்கிற பெயரில் ரீமேக் ஆன இந்த படத்துக்கு தமிழிலும் நல்ல விமர்சனங்கள் கிடைத்தன.
போலீஸ் கமிஷனர் கீதா பிரபாகரனின் ஒரே மகன் வருண், ஜார்ஜ் குட்டி மகளின் அதே கல்லூரியில் படிக்கிறான். ஒழுங்கீனமான வருண் கல்லூரி சுற்றுலா செல்லும் போது தனது கேமராவில் அனுவை தவறான நோக்கில் படம் எடுத்துவிட்டு, அதை வைத்து தனது ஆசைக்கு இணங்க மிரட்டுகிறான். அனு இதை தம் அம்மா ராணியிடம் சொல்ல, புத்திமதி சொல்லி திருத்தி விட எண்ணிய ராணி வருணை வீட்டிற்கு வரச் சொல்கிறாள்.
ஆனால் எதிர்பாராத விதமாக நடக்கும் விபரீதத்தில் வருண் இந்த அம்மா-மகளால் கொல்லப்படுகிறான். இதை அறிந்த ஜார்ஜ் குட்டி தன் குடும்பத்தை காக்க ஒரு சராசரி மனிதாக யோசிக்கிறான். அதே சமயம் வருண் தவறு செய்திருந்தாலும் சட்டமும் சமூகமும் தன் குடும்பத்துக்கு எதிராகவே நிற்கும் என்பதை உணரும் ஜார்ஜ் குட்டி, ஆபத்துக்காலத்தில் தன் குடும்ப பெண்கள் செய்த கொலையை மறைக்க செய்யும் முயற்சியும் அதன் தொடர்ச்சியாக பலரை சமாளிப்பதும் தான் இந்த த்ரில்லர் டிராமாவான திரிஷ்யம் படத்தின் கதை.
இதன் தொடர்ச்சியாக திரிஷ்யம் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. இந்தப் படத்திலும் முதல் பாகத்தில் இருந்த அதே விறுவிறுப்பும் பரபரப்பும் குறையாமல் இருந்ததால், இந்தப் படமும் வெற்றி பெற்றது. இந்த நிலையில்தான் இதன் மூன்றாம் பாகம் உருவாக இருப்பதாக, கடந்த சில வாரங்களுக்கு முன் தகவல்கள் கூறப்பட்டன. இந்த நிலையில் கேரளாவில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டஅந்த படத்தின் தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர் ‘த்ரிஷ்யம் 3’ பட பணிகள் தொடங்குவதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனை கேட்ட பின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில், ‘கிளாசிக் கிரிமினல் ஈஸ் பேக்’ என்று குறிப்பிட்டு ‘த்ரிஷ்யம் 3’ ஹேஷ்டேக்கை ட்ரெண்டு செய்து வருகின்றனர்.