மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் (Mohan Lal) மற்றும் இயக்குனர் ஜீத்து ஜோசப்பின் கூட்டணியில் 2013-ல் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான த்ரிஷ்யம், பார்வையாளர்களையும் விமர்சகர்களையும் மிகவும் கவர்ந்தது.
இந்த திரைப்படம் இந்திய சினிமாவின் அனைத்து முக்கிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. குறிப்பாக தெலுங்கில் வெங்கடேஷ், இந்தியில் அஜய் தேவ்கன், தமிழில் கமல்ஹாசன் (Kamal Haasan) நடிப்பில் பாபநாசம் என ரீமேக் செய்யப்பட்டது. சமீபத்திய தகவலின்படி, மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படம் இப்போது ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது.
அதில் சுவாரஸ்யமாக, இந்தோனேசிய மொழியில் ரீமேக் செய்யப்படும் முதல் மலையாளத் திரைப்படமாக த்ரிஷ்யம் இப்போது உருவாகியுள்ளது. இந்த அற்புதமான தகவலை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பதிவில் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் பாபநாசம் - 2 என்று ரீமேக் ஆகப்போகிறது. இந்நிலையில் மீண்டும் மோகன்லாலை வைத்து ஜீத்து ஜோசப் '12th Man' படத்தை இயக்க உள்ளதாக கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியானது. மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் இந்த படத்தை தயாரிக்கிறார்.