நடிகர் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் நவம்பர் 25-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
முன்னதாக கடைசி நேரத்தில் பட வெளியீட்டில் இழுபறி ஏற்பட்டதைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தமது ட்விட்டரில், “நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயவாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது. என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்!” என பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மாநாடு பட வெளியீட்டில் இருந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, படவெளியீடு உறுதியானது. இதனை அடுத்து, “தாமதம். இரவு முழுக்க நிறைய நலம் விரும்பிகள் அழைத்தும் குறுந்தகவலிலும் தைரியமூட்டினர். நிறைய பேரின் அழைப்பை எடுக்க இயலவில்லை. அரசியல் பிரமுகர்கள் , சினிமா பிரபலங்கள், பத்திரிகை நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றிகள்..” என சுரேஷ் காமாட்சி ட்வீட் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் மாநாடு படத்துக்கும் படக்குழுவினருக்கும் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த வாழ்த்தினை ரிட்வீட் செய்து, “அடுத்ததாக மோகன் ஜி (திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களின் இயக்குநர்) உங்களை இயக்க ரெடி.. அருமையான கதையும் தயார்! எப்போ ஷூட்டிங் போகலாம்?” என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் புரொஃபைல் பெயர் மற்றும் புகைப்படத்துடன் கூடிய ட்விட்டர் பக்கத்தில் இருந்து ஒரு பதிவு இடப்பட்டுள்ளது.
இந்த பதிவை ரீட்வீட் செய்த, மாநாடு பட தயாரிப்பாளரும், மிக மிக அவசரம் படத்தின் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி, “இது ஃபேக் ஐடி.. இந்த ட்வீட்களை செய்தவரை புறக்கணிக்கவும்” என தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அடுத்ததாக ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் படத்தையும் சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.