பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனவர் மோகன் ஜி. இந்த படத்தை தொடர்ந்து, திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட திரைப்படங்களையும் அவர் இயக்கி இருந்தார்.
Images are subject to © copyright to their respective owners
மோகன் ஜி இயக்கும் திரைப்படங்கள் குறித்து ஏரளமான கருத்துக்கள் பரவலாக இருந்து வரும். சூழலில் அவை அனைத்திற்கும் தனது விளக்கங்களையும் மோகன் ஜி கொடுத்து வந்துள்ளார்.
ருத்ர தாண்டவம் படத்திற்கு பிறகு மோகன் ஜி இயக்கத்தில் உருவான பகாசுரன் திரைப்படம், தற்போது திரை அரங்குகளில் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனர் செல்வராகவன் மற்றும் பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்டி நட்ராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ராதாரவி, K.ராஜன், தாராக்ஷி, ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி, சசி லையா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சாம் C.S. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் "பகாசூரன்" படத்தை தயாரித்துள்ளது.
இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு இயக்குனர் மோகன் ஜி, அவரது மனைவி ஆகியோர் பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். இதில், அவர்களின் மகளும் உடன் இருந்தார். இந்த பேட்டியில், தனது திரை பயணம் குறித்தும், தனது படங்கள் மீது வரும் விமர்சனங்கள் குறித்தும் நிறைய கருத்துக்களை மோகன் ஜி பகிர்ந்து கொண்டார்.
அதே போல, கணவர் இயக்கும் திரைப்படங்கள் குறித்து மோகன் ஜி மனைவியும் நிறைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தார். அவரது திரை பயணத்தில் ஒரு மனைவியாக தான் ஆற்றி வரும் பங்கு குறித்தும் நெகிழ்ச்சியாக பேசி இருந்தார் மோகன் ஜி மனைவி.
இதற்கு மத்தியில், அவர்களின் மகளும் சில சுவாரஸ்யமான விஷயங்கள் பற்றி பேசி இருந்தார். தனக்கு பிடித்த திரைப்படம் "ஜெய் பீம்" என மோகன் ஜி மகள் கூறி இருந்த சூழலில், தந்தை இயக்கிய இரண்டு படங்களும் தனக்கு பிடிக்கும் என்று கூறியிருந்தார். இதன் பின்னர், ஜெய் பீம் மற்றும் வாத்தி ஆகிய திரைப்படங்களில் வரும் பாடல்களையும் மோகன் ஜி மகள் அசத்தலாக பாடி அனைவரையும் அசத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.