நூற்றாண்டுகால தமிழ் சினிமாவில் பல தலைமுறைகளைத் தாண்டி ஒருவருடைய பெயர் இன்னும் பேசப்படுகிறதென்றால் அந்தப்பெருமை எம்.கே.தியாகராஜ பாகவதரைத்தான் சேரும்.
ஆம், தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார். மயிலாடுதுறையைச் சேர்ந்த எம்.கே.தியாகராஜ பாகவதர். நடிகர், சினிமா தயாரிப்பாளர், கர்நாடக இசைப் பாடகர் என பன்முக திறமைகளைக் கொண்டிருந்தார். 14 படங்கள் நடித்துள்ளார். அதில் 10 படங்கள், வசூலில் சாதனை படைத்த படங்களாகும். 'ஹரிதாஸ்', திரைப்படம்,தொடர்ந்து 3 ஆண்டுகள் தியேட்டரில் ஓடி அந்த காலத்திலே சாதனை படைத்தது. செல்வ செழிப்போடு இருந்தவர் தனது 49 வயதில் மரணமடைந்தார். அதன் பிறகு அவரது குடும்பத்தின் நிலை மாறி போனது. தலைமுறைகள் வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு தொழில் சார்ந்து நகர்ந்து போனார்கள்.
எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வயிற்றுப் பேரன் சாய்ராம் நேற்று முதல்வரின் தனிப்பிரிவுக்கு வந்து மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், 'எனது தாத்தா எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு 2 மனைவிகள் இருந்தனர். 2-வது மனைவி ராஜம்மாள். அவர்களின் மகள் அமிர்தலட்சுமி - பாஸ்கர் ஆகிய தம்பதியின் மகன் நான். எனக்கு அண்ணன், தம்பி, தங்கை உள்ளனர். நாங்கள் 4 பேரும் சிறு வயதில் இருக்கும்போதே அப்பா இறந்துவிட்டார். அம்மாவும் இல்லை. பாட்டிதான் எங்களை வளர்த்தார்.
தற்போது எங்கள் குடும்பத்தினர் மிகவும் கஷ்டத்தில் உள்ளனர். அனைவருமே சூளைமேட்டில் உள்ள அண்ணண் வீட்டில் வசிக்கிறோம். மிகுந்த பணக் கஷ்டத்தில் இருக்கிறோம். தங்கையின் கணவரும் இறந்துவிட்டார்.
நான் புகைப்பட கலைஞராகவும், வீடியோ படம் பிடிப்பவராகவும் இருந்தேன். அந்த உபகரணங்களை வாடகைக்கு எடுத்து தொழில் செய்து வந்தேன். இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக நானும் எங்கள் குடும்பத்தினரும் வேலையையும் இழந்துவிட்டோம். நான் செக்யூரிட்டி மற்றும் சமையல் வேலைகளுக்குச் சென்று வருகிறேன். எங்களால் வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியவில்லை. எனவே வீட்டு வசதி வாரியத்தில் அரசு எங்களுக்கு ஒரு வீட்டை ஒதுக்கினால் அனைவருமே அங்கேயே வசிப்போம். எங்கள் வாழ்க்கைக்கு அது பேருதவியாக அமையும்' என்று கூறியிருந்தார். இந்த செய்தி வெளியாகி எம்.கே.தியாகராஜ பாகவதரின் தலைமுறைகளுக்கு இப்படி ஒரு நிலையா என்று பலரையும் உருக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.