சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி நல்ல பாரட்டைப்பெற்ற "தி கிரேட் இந்தியன் கிச்சன்" படத்தின் தமிழ் ரீமேக்கை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து இயக்கி முடித்து உள்ளார், இயக்குனர் ஆர். கண்ணன்.
அதனைத் தொடர்ந்து 1972ம் ஆண்டு ஏ வி எம் தயாரிப்பில் தமிழின் தலைச்சிறந்த நகைச்சுவை திரைக்கதை ஆசிரியர் சித்ராலயா கோபு எழுத்தில், தேங்காய் சீனிவாசன், முத்துராமன், ஆச்சி மனோரமா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்ற காசே தான் கடவுளடா படத்தை ரீமேக் செய்து தயாரித்து இயக்குகிறார் ஆர். கண்ணன்.
இவர் ஏற்கனவே இயக்கிய கண்டேன் காதலை, சேட்டை, தள்ளிப்போகாதே, எரியும் கண்ணாடி போன்ற படங்களும் ரீமேக் படங்கள் தான். இந்த புது படத்திற்கும் ’காசே தான் கடவுளடா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
நகைச்சுவைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து உள்ளவர் மிர்சி சிவா. முன்னனி நடிகர்களான ரஜினி,அஜித், விஜய் போன்றோர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து நல்ல வரவேற்பை பெற்று வலம் வருபவர் யோகி பாபு.
இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் இந்த படத்தில் பிரியா ஆனந்த், கருணாகரன், ஊர்வசி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
படம் குறித்து இயக்குனர் கண்ணன் கூறியதாவது…
“’காசேதான் கடவுளடா’ திரைப்படம் எக்காலத்திற்கும் பொருந்தும் ஒரு படைப்பு, எனவே இப்படத்தினை ரீமேக் செய்வதற்கான முறையான அனுமதியை ஏ வி எம் நிறுவனத்திடம் பெற்று, தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்றவகையில் ரீமேக் செய்யவுள்ளோம். மிர்ச்சி சிவா, யோகிபாபு, ஊர்வசி, கருணாகரன் போன்ற திறமை வாய்ந்த நடிகர்கள் இப்படத்தை மீண்டும் ஒரு அழகான படைப்பாக மாற்றுவார்கள் என மிக ஆழமாக நம்புகிறேன்,” என்றார்.