மதுரை பாண்டியராஜபுரம் நியாய விலைக்கடையில் எடை போடாமல் அரிசியை கைகளால் அள்ளிப்போடுவதாக எழுந்த புகாரை அடுத்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி ஆக்ஷனில் இறங்கினார்.
மதுரையை அடுத்த பெத்தானியபுரத்தில் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டார். அப்போது பெண்கள் சிலர், பாண்டியராஜபுரம் ரேஷன் கடையில் அரிசி முறையாக வழங்குவதில்லை என்றும், எடை போடாமல் கைகளிலேயே அள்ளி போடுவதாகவும் முறையிட்டனர்.
இந்த புகாரை கேட்ட அடுத்த நிமிடமே வண்டியை எடு என அதிமுக நிர்வாகி ஒருவரின் புல்லட்டில் ஏறிச் சென்ற அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார். அந்த ரேஷன் கடையில் ஆய்வு நடத்திய அவர், ரேஷன் கடை ஊழியர் தெய்வேந்திரன் மீது தவறு இருப்பது உறுதியானால் உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், கடையில் வெளிநபரான பெரியசாமி என்பவர் உள்ளே இருந்ததை கண்ட அமைச்சர், அவரை கைது செய்யுமாறு காவல்துறையினரிடம் கூறினார்.
அமைச்சர் செல்லூர் ராஜூவின் இந்த அதிரடி ஆக்ஷனால் மதுரை பாண்டியராஜபுரம், பெத்தானியபுரம் மக்கள் அவருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.