அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.
லைகா தயாரித்திருக்கும் இத்திரைப்படம் 2 பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” வரும் 2022 செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாப் பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதையை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர். சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் பட நடிகர்கள் பார்த்திபன், திரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி பங்குபெற்ற பிஹைண்ட்வுட்ஸ் பிரத்தியேக நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது,. மணிமேகலை தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, “அப்பா பொன்னியின் செல்வன் படிக்கவில்லை. ராமாயணம் & மகாபாரதம் குறித்து பேசியிருக்கிறார்.
ஆனால் பொன்னியின் செல்வன் குறித்து பேசியதில்லை. எனக்கும் ஆச்சரியம்தான், சாண்டியல்ன் கதைகள் எல்லாம் படித்தவர் பொன்னியின் செல்வன் படிக்காமல் இருந்தது ஆச்சரியம்தான்.
ஆனால் அப்பா ஒரு தகவல் சொன்னார்கள், அப்பாவின் 100வது படவிழாவில் பேசிய அன்றைய மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் பொன்னியின் செல்வன் எடுக்க விருப்பப் பட்டதாகவும், அதில் அருண்மொழி வர்மன் கேரக்டரை அப்பா பண்ணவேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும் அப்பா சொல்லியிருந்தார். இப்போது நான் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடிப்பதால் அப்பா பொன்னியின் செல்வன் ஆடியோ புக்ஸ் கேட்டுக்கொண்டிருக்கிறார்.” என்று கூறினார்.
அதன் பிறகு பேசிய பார்த்திபன், “அந்த காலத்தில் இளவரசர், முருகன், கண்ணன் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சிவகுமார் சார்தானே” என்றார். அப்போது பேசிய கார்த்தி, “ஆம், இப்போது ரவி..” என்று ஜெயம் ரவியை குறிப்பிட்டார்.