மேதகு பட இயக்குநர் கிட்டு இயக்கியுள்ள சல்லியர்கள் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குநர்கள் பாரதிராஜா முதல் வெற்றிமாறன் வரை வெளியிட்டனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆரம்பகால வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த மேதகு படத்தை இயக்கியவர் இயக்குநர் கிட்டு. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், டிரைலர் வெளியானதில் இருந்தே பலத்த ஆதரவு கிடைத்தது. வெகுஜன மக்கள் மட்டுமல்லாது திரைப்பட பிரபலங்களும் இப்படத்தை ஆதரித்து விளம்பரம் செய்தனர்.
படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஓடிடி தளத்தில் வெளியாகி தமிழ் மக்களின் ஆழமாக பிரபாகரனை கொண்டு சேர்த்தது. மேதகு படத்தை திரை பிரபலங்கள் சிலாகித்து பேசியிருந்தனர். நாடக வடிவில் ஒருவருடைய வரலாற்றை சொல்லும் யுக்தியை கையாண்டு பிரபாகரனின் இளமை கால போராட்டத்தை பதிவு செய்திருந்தார் இயக்குநர் தி.கிட்டு.
ஈழத்தின் போராட்டத்தையும் அர்ப்பணிப்பையும் உலகுக்கு உரக்கச் சொல்லும் படமாக மேதகு படம் உருவாகி இருக்கிறது என்று இயக்குநர் சசிக்குமார் தெரிவித்திருந்தார். அதேபோன்று அனைவரும் இப்படத்தை பார்க்க வேண்டும் என, இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்கள் சத்யராஜ், சசிக்குமார், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் உள்ளிட்டோர் சமூக ஊடகங்களில் ஆதரவு தெரிவித்தனர்.
1950 களுக்கு பிறகு இலங்கையில் நடந்த இனக்கலவரம், உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 1980 வரை நடந்த அரசியல் மாற்றங்கள், கல்வி போராட்டம், பிரபாகரனின் முதல் அமைப்பான புதிய தமிழ்ப் புலிகள் உருவானது வரை முதல் பாகத்தில் சொல்லப்பட்டுள்ளது.
பிரபாகரன் வாழ்க்கையை சித்தரித்ததில் சில குறைகள் இருந்தாலும் உண்மை நெருக்கமாக அமைந்திருக்கிறது என பரவலான பாராட்டுகளையும் படக்குழு பெற்றது. உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் நன்கொடையின் மூலமாக பிரபாகரனின் இளமைக்கால வாழ்வை சொல்லும் படமாக உருவாக்கப்பட்டிருந்தது.
பர்ஸ்ட் லுக்
இந்நிலையில், மேதகு பட இயக்குநரின் அடுத்த பாய்ச்சலாக 'சல்லியர்கள்' என்ற பெயரில் புதுப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் போஸ்டரை தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் சமூவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர்கள் இமயம் பாரதிராஜா, வெற்றிமாறன், எம். சசிகுமார், ரா.சரவணன், நடிகர் கருணாஸ், சூரி உள்ளிட்ட பலரும் தங்களது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். தமிழர் போர் அறம் சொல்லும் படைப்பான 'சல்லியர்கள்' என்ற திரைப் படைப்பின் முதல் பார்வை மற்றும் தலைப்பை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளனர்.
சல்லியர்கள்
மகாபாரதத்தில் சல்லியன் என்ற கதாபாத்திரம் உண்டு. உண்மை வரலாற்றை புனைவோடு கலந்து சொல்ல இயக்குநர் முயற்சிக்கிறார் என்றே தோன்றுகிறது. பட போஸ்டரில் ஒரு பெண் மருத்துவம் பார்க்கும் இடத்தில் கைகளில் கையுறை அணிந்திருப்பது பதட்டத்துடன் பார்ப்பது போன்று வெளியாகியுள்ளது. சல்லியர்கள் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.