நடிகர் மற்றும் இயக்குனருமான பார்த்திபன் துபாயின் தங்க விசா பெறும் முதல் நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
சினிமாவில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்த கௌரவம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற இவருக்கு குடியுரிமைக்கான ஆணையத்தின்( ICA) அதிகாரிகள் இந்த விசாவை அவருக்கு வழங்கினர்.
இது குறித்து நடிகர் பார்த்திபன் கூறுகையில், எனக்கு கோல்டன் விசா வழங்கிய துபாய் அரசுக்கு மனமார்ந்த நன்றி. நான் இதற்கு தகுதியானவன் என்று என்னை கருதி அதற்காக இதை வழங்கியதற்கு துபாய் அரசுக்கு அன்பும் நன்றியும் என்றும் கூறினார்.
துபாய் கோல்டன் விசா என்பது நீண்ட கால குடியிருப்பு விசா முறையாகும். இது 10 ஆண்டுகள் வரை இருக்கும். மேலும் நாம் தானாகவே அதை புதுப்பிக்கலாம். மேலும் பல துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் மற்றும் பல துறைகளில் திறமை உள்ளவர்களுக்கு இது வழங்கப்படுகிறது.
இந்த சந்தோஷத்தை பகிர்ந்த பார்த்திபனுக்கு பல ரசிகர்களும், நடிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதை பார்த்த பல நெட்டிசன்ஸ், வெற்றி கொடி கட்டு படத்தில், பார்த்திபன் நடித்த கதாபாத்திரத்தை நினைவுகூர்ந்து உள்ளனர். அந்த படத்தில் அவர் துபாய் செல்ல மிகவும் போராடுவார். நடுத்தர குடும்பத்தில் உள்ள ஒருவர் தன் குடும்பத்தை காப்பாற்ற என்ன சூழ்நிலைகளை எல்லாம் சந்திக்கிறார் என்பதை தெளிவாக கூறி இருப்பார்.
ஆனால் இப்போது, இவருக்கு மிக பெரிய கெளரவம் கிடைத்துள்ளது. அதை கொண்டாடும் வகையில், சில மீம்ஸ் சமூகவலைத்தளத்தில் பரவுகின்றது. அதாவது, "ஒரு காலத்தில் ஆனந்தராஜ் என்ற ஏஜென்ட் இடத்தில், இருந்து துபாய் போக ஒரு லட்சம் பணத்தைக் கட்டி ஏமாந்த அவருக்கு தற்போது துபாய்யின் கோல்டன் விசா கிடைத்து இருக்கு" என்று கமெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் பார்த்திபன், சமீபத்தில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருது விழாவில் ஒத்த செருப்பு படத்திற்காக ஸ்பெஷல் ஜூரி விருது வென்றார். இப்போது இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பிஸியாக இருக்கிறார். அதையடுத்து, ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு வரும், இரவின் நிழல் என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.