பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் மயில்சாமி காலமானார். 57 வயது மதிக்கத்தக்க நடிகர் மயில்சாமி, பல தமிழ்ப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்.
இந்நிலையில்தான் நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் திடீர் மரணம், தமிழ் சினிமாவில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது இறுதிச் சடங்கு சென்னை விருகம்பாக்கம் - சாலிகிராமம் வெங்கடேஷ்வரா நகர் பகுதியில் நடைபெறுகிறது. மேலும் இறப்பு நிகழ்வுக்கு வருகை தந்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், “எழுந்து வா மயில்” என கதறி அழக்கூடிய உருக்கமான காட்சிகள் நெஞ்சை ரணமாக்குகின்றன.
மேலும் மயில்சாமி மறைவு குறித்து பேசிய எம்.பாஸ்கர், “நானும் மயிலும் மாப்ள, மாமா என பேசிக்கொள்வோம். ஒரு நாளைக்கு 100 ரூபாய் என கஷ்டப்பட்ட அடிமட்ட காலத்தில் இருந்து பழகினோம். அவர் நடிகர், கலைஞர், மிமிக்ரி ஆர்டிஸ்ட் என்பதை தாண்டி, இளகிய வெள்ளந்தியான மனமும் பக்தியும் கொண்டவர். சிவன் பக்தரான அவர் சிவராத்திரியான காலையில் மரணம் அடைந்துள்ளார். விவேக் இப்படிதான் திடீரென ஒரு காலையில் மரணம் அடைந்தார். நல்லவர்கள் எல்லாம் இப்படி காலமானால், நாம் ஏன் நல்லவனாக இருக்கிறோம் என தோன்றுகிறது. எனக்கு என்ன சொல்றதுனே தெரியல. போயிட்டு வாடா.. இந்த பிறவியில் உன் நட்பு போதும்” என உருக்கமாக பேசியுள்ளார்.