கொரோனா வைரஸின் பாதிப்பைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொது இடங்களில் கிருமி நாசினிகளை தெளிக்கும் பணிகளில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பாதிப்பு உள்ள சில பகுதிகளை தனிமைப்படுத்தி, அப்பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் நிலமையின் தீவிரத்தை உணரமால் மக்கள் சில இடங்களில் அரசின் உத்தரவை மீறி வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்யும் நிகழ்வுகளும் அரங்கேறிவருகிறது.
இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்ய வந்த சுகாதாரத்துறையினர் மீது அப்பகுதியினர் சிலர் கல் எறிந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து 'ஆடை', 'மேயாத மான்' படங்களின் இயக்குநரும், 'மாஸ்டர்' வசனகர்த்தாவுமாகிய ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் , ''மனிதத்தன்மை எங்கே ? இது காட்டுமிராண்டித்தனம். இதனை பார்க்கும் போது என் மனம் உடைகிறது. சில நேரங்களில் இந்த வைரஸ் நமக்கு தேவைதான் தோன்றுகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.