நடிகர் ஆர்யா நடிப்பில் கடைசியாக 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ஜெர்மனி குடியுரிமை பெற்ற ஈழத்தமிழ் பெண் விட்ஜா என்பவர், நடிகர் ஆர்யா தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னிடம் 70 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு, திருமணம் செய்யாமல் தன்னை ஏமாற்றி விட்டதாக ஆன்லைன் மூலம் குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமர் அலுவலகங்களில் புகார் அளித்திருந்தார். பிரதமர் அலுவலகத்தில் இருந்து தலைமச்செயலகத்திற்கு பார்வர்ட் செய்யப்பட்ட இந்த புகாரை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த புகார் தொடர்பாக நடிகர் ஆர்யாவை சைபர் கிரைம் போலீசார் நேரில் ஆஜராக சொல்லி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நடிகர் ஆர்யாவிற்கும் இந்த வழக்கிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தெரிய வர, இந்த விசாரனையை முடுக்கிய சைபர் கிரைம் போலிசார், சென்னை புளியந்தோப்பை சேர்ந்த முகமது அர்மான் மற்றும் முகமது ஹூசைனி பயாக் ஆகியோரை ராணிப்பேட்டை மாவட்டம் பெரும்புலி பாக்கத்தில் கைது செய்தனர்.
நடிகர் ஆர்யா பேரில் சமூக வலைத்தளம் மூலம் பெண்மணி விட்ஜாவிடம் திருமணம் செய்துகொள்வதாக கூறி இவர்கள் இருவரும் பணம் பறித்ததுள்ளனர். கைதான இருவரிடமிருந்தும் 2 செல்போன்கள், 1 லேப் டாப், 1 ஐபேட் மற்றும், 65 லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர்.
இந்த நடவடிக்கைக்கு நன்றி சொல்லி நடிகர் ஆர்யா தற்போது டிவீட் செய்துள்ளார். அதில் இந்த விவகாரத்தில் துரிதமாக செயல்பட்ட மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலிசாருக்கு நன்றி சொல்லி உள்ளார்.