கதிர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய திரைப்படம் பரியேறும் பெருமாள். இந்த படம் அதன் வித்தியாசமான திரைமொழிக்காகவும், எதார்த்தத்துக்காகவும் பெரும் வரவேற்பையும் நல்ல மதிப்பீட்டு விமர்சனங்களையும் பெற்றது.
முன்னதாக கதை எழுத்தாளராக அறியப்பட்ட மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் படத்தினைத் தொடர்ந்து அவரது அடுத்த படம் பற்றிய ஆவல் அனைவருக்கு அதிமானது. அதன்படி அடுத்த திரைப்படம் கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் கர்ணன் என்கிற தகவல் வெளியானதுமே படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படத்துக்கும் அப்படத்தின் நாயகன் தனுஷ்க்கும் தற்போது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த கூட்டணி தான் இப்போது மாரி செல்வராஜுடன் இணைந்து கர்ணன் படத்தை உருவாக்கியுள்ளது என்பதால் படத்துக்கு தற்போது இன்னும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
இதனிடையே இந்த படத்தின் வித்தியாசமான கதைச் சூழலுடன் கூடிய பாடல்களும் சந்தோஷ் நாராயணனின் இசையும் இந்த படத்திற்கு கூடுதல் பலமாகவே இருக்கின்றன. அந்த வகையில் கண்டா வரச்சொல்லுங்க பாடல் தொடங்கி இப்போது வெளியாகியுள்ள உட்ராதீங்க யப்போவ் பாடல் வரை அனைத்துமே கதையுடன் ஒன்றிவரும் பாடல்களாக அமைந்துள்ளன. எனவே இந்த படத்தின் கதையைத் தெரிந்துகொள்ளும் ஆவல் அனைவருக்குள்ளும் உள்ளது. இந்த சூழலில் இந்த படம் உருவான கதையை இப்போது நடந்துள்ள கர்ணன் பத்திரிகையாளர் சந்திப்பில் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
“இந்த படத்தில் கடவுள்களை வைத்து சமூக நீதியை பேசியிருக்கிறேன். அதை பார்வையாளர்கள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்கிற பதட்டம் இருந்தது. பரியேறும் பெருமாள் படம் வெளியானதும் தனுஷ் சார் அழைத்தார். கதை வெச்சிருக்கீங்களா என்றார். நான் வெச்சிருக்குற அத்தனை கதையுமே நீங்கதான் சார் பண்ண முடியும் என்று சொன்னேன். தனுஷ் சார் கதையை கேட்டு ஓகே பண்ணியதை நம்பவே முடியல. அடுத்து தாணு சார் கதை கேட்கும் முன்னரே தனுஷ் தன்னிடம் ஒரு சீன் சொன்னதாகவும் அதனால் கதை ஓகே என்றும் சொல்லிவிட்டார். கர்ணனின் கதை என்று ஒரு 55 கதைகள் சுற்றுகிறது.
நீ எடுத்து முடிச்சுட்டு வா நான் இருக்கேன் என தாணு சார் சொன்னார். நீங்க எடுங்க நான் இருக்கேன் என தனுஷ் சார் சொன்னார். இப்படிதான் இந்த படம் தொடங்கியது. கர்ணன் படம் திருநெல்வேலி களத்தில் 1997ல் நடக்கிற கதை. சந்தோஷ் சார் நான் ஒரு போர்ப்பாடலாகவும், ஒரு யுத்த பாடலாகவும் எல்லா வகையான பிரச்சனைக்கும் மனிதர்கள் இதை கேட்க வேண்டும் என கேட்டேன். அவர் எனக்காகவே தனியாக பணிபுரிந்தார். இந்த படத்தை என்னுடைய தயாரிப்பாளரும் என்னுடைய ஹீரோவும் முழுக்க முழுக்க கலைஞனுக்கான சுதந்திரத்துடன் பணிபுரிய அனுமதித்தனர். யோகிபாபு சார் என் படத்தில் நடிப்பதில் உறுதியாய் இருந்தார். கையில் இருக்கும் எல்லா கயிறுகளையும் அவிழ்க்கச் சொல்லி யோகிபாபுவை நடிக்க வைத்தேன். ” என்று குறிப்பிட்டுள்ளார்.
கர்ணன் படம் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது. முழு வீடியோவை இந்த இணைப்பில் காணலாம்.