நடிகர் மயில்சாமி கடந்த சிவராத்திரியன்று கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் இரவு முழுவதும் சிவனை தொழுது அதிகாலையில் கிளம்பி இருந்தார். வீட்டுக்கு திரும்பிய மயில்சாமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட அவரை மருத்துவமனை அழைத்து சென்ற சூழலில், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

Also Read | இறப்புக்கு முன்.. டிரம்ஸ் சிவமணியுடன் மயில்சாமி பேசிய ஆடியோ.. மனதை கலங்கடிக்கும் பின்னணி!!
இதனைத் தொடர்ந்து, அவரது உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தவும் செய்திருந்தனர். தொடர்ந்து மயில்சாமி உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்ட சூழலில் அவரது மறைவு பலரை வாட்டியும் வருகிறது.
சினிமாவில் சிறந்த நடிகராக மயில்சாமி வலம் வந்த அதே சூழலில் தன்னிடம் உதவி என்று கேட்போருக்கு தன்னிடம் இல்லை என்ற சூழலிலும் கூட மற்றவரிடம் வாங்கியாவது தக்க நேரத்தில் உதவி செய்யும் பழக்கத்தை கொண்டிருந்தார். உதவி என வருபவர்களை வெறும் கையுடன் அனுப்பும் பழக்கம் இல்லாத மயில்சாமியின் மறைவு பற்றி பலரும் கண்ணீர் மல்க கருத்து தெரிவித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில், Behindwoods சேனலுக்காக நடிகர் மயில்சாமி குறித்து நிறைய விஷயங்களை உருக்கத்துடன் நடிகர் மனோபாலா பகிர்ந்து கொண்டார்.
அப்போது மயில்சாமி திரும்ப வந்தால் நீங்கள் என்ன கேட்பீர்கள் என்று கேள்விக்கு பதில் அளித்த மனோபாலா, "ஏன்டா அவசரப்பட்ட. உனக்கு என்ன அவசரம் என்று தான் கேட்பேன்" என கூறினார்.
தொடர்ந்து மயில்சாமியுடனான பந்தம் குறித்து பேசி இருந்த மனோபாலா, "அந்த குணம் இருக்கு பாருங்க, நம்மளுக்கு கூட அந்த குணம் வருமான்னு சொல்ல முடியாதுங்க. அவர பாத்து இன்ஸ்பிரேஷன், இவரை பார்த்து இன்ஸ்பிரேஷன்னு பேச்சுக்கு வேணா சொல்லலாம். ஆனா செயல்பாட்டில் பண்ண முடியுமான்னு கேட்டா கஷ்டம். ஆனால் அதை செயல்படுத்துனது மயில்சாமி. இந்த குணம் தான் கடைசி வரைக்கும் அவர் கூட இருந்தது. அவரோட ஆத்மா நல்ல இடத்துக்கு போய் இறைவனுடைய நிழலில் இளைப்பாரணும்ன்னு கேட்டுக்குறேன்" என்றார்.
அதேபோல் மயில்சாமி என்றால் ஞாபகத்துக்கு வரும் வார்த்தை பற்றி பேசிய மனோபாலா, "மாமா என்று என்னை அழைப்பது ரொம்ப பிடிக்கும். யாரா இருந்தாலும் உறவு முறையோடு கூப்பிடுவாரு. சார் என்ற வார்த்தை மயில்சாமிகிட்ட இருந்து வராது. எப்படி இருக்கே மாமா, மச்சான் எப்படி இருக்கேன்னு யாரா இருந்தாலும் அப்படி தான் கூப்பிடுவான். பெரியவங்களா இருந்தா அண்ணன், சின்னவங்களா இருந்தா தம்பின்னு இந்த மாதிரி உறவு முறையை வைத்து கூப்பிடுவது அவருக்கு கைவந்த கலை" என மனோபாலா தெரிவித்தார்.
Also Read | "10 நாள் முன்னாடி பாக்குறப்போ மூச்சு எறைக்குதுன்னு சொன்னான்".. மயில்சாமி பத்தி மனோபாலா சொன்ன தகவல்!!