இன்று வெளியான துணிவு படத்தின் 'காசேதான் கடவுளடா' பாட்டில் தனது குரல் கேட்காதது குறித்து மஞ்சு வாரியர் விளக்கம் அளித்திருக்கிறார்.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் இதற்கு முன்பாக வலிமை திரைப்படம், கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது. H.வினோத் இயக்கி இருந்த இந்த திரைபடத்தை போனி கபூர் தயாரித்திருந்தார்.
வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக துணிவு திரைப்படத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படத்திற்கு மூன்றாவது முறையாக துணிவு திரைப்படம் மூலம் நடிகர் அஜித் குமார், இயக்குனர் H. வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் இணைகின்றனர்.
இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.
இந்த படத்தின் ஒளிப்பதிவை நீரவ் ஷா கவனிக்கிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார். இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.
துணிவு படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
முன்னதாக இந்த படத்தின் முதல் சிங்கிளான சில்லா பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இன்று 'காசேதான் கடவுளடா' எனும் இரண்டாம் சிங்கிள் வெளியாகி இருக்கிறது. வைசாக் இந்த பாடலை எழுதி, பாடியிருக்கிறார். அவருடன் மஞ்சு வாரியர் மற்றும் ஜிப்ரான் ஆகியோரும் இப்பாடலை பாடியுள்ளனர். 3.14 நிமிடங்கள் ஓடும் இந்தப்பாடல் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில், இந்த வீடியோவில் மஞ்சு வாரியரின் குரல் கேட்கவில்லை என ரசிகர்கள் சமூக வலை தளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், இதுகுறித்து அவர் விளக்கம் அளித்திருக்கிறார். அவர் எழுதியுள்ள பதிவில்,"துணிவு படத்திலிருந்து காசேதான் கடவுளடா பாடல் Lyrical வீடியோ வெளியாகியுள்ளது. இதில் என் குரல் கேட்கவில்லையே என்று கவலை வேண்டாம். வீடியோவிற்காக இது பதிவு செய்யப்பட்டது. உங்களுடைய அக்கறைக்கு நன்றி. வேடிக்கையான ட்ரோல்களை ரசித்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.