கடந்த 1993 ஆம் ஆண்டில் வெளியான 'ஜென்டில்மேன்' படம் 25 வருடங்களை கடந்துள்ளது. அதன் மூலம் இயக்குநர் ஷங்கர் திரையுலகில் அறிமுகமாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனையடுத்து பிரபல இயக்குநர்களின் சார்பில் 'ஷங்கர் 25' என்ற பெயரில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இயக்குநர்கள் மணிரத்னம், மிஷ்கின், அட்லி, லிங்குசாமி, ரஞ்சித், வசந்தபாலன், பாண்டிராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். நிகழ்வில் எஸ் 25 என்ற குறிப்பிடப்பட்ட நீல நிற டீ-ஷர்ட்டை அனைத்து இயக்குநர்களும் அணிந்திருந்தனர். இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த வசந்த பாலன்,
ஷங்கர் 25 என்ற நிகழ்வை இயக்குநர்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என இயக்குநர் லிங்குசாமி விரும்ப.. இயக்குநர் மிஷ்கினுடன் மேலும் பல இயக்குநர்கள் இணைந்து விழா நடத்த தயாரானார்கள். அதன்படி மிஷ்கினின் அலுவலகத்தில் மாலை 6.30 மணிக்கு கேக் வெட்டி விழா துவங்கியது.
இளையராஜாவின் பாடலை கௌதம் பாட, மிஷ்கின், லிங்குசாமி, பாண்டிராஜ் நடனமாட மொத்த இடமும் இசையில் கொந்தளித்தது. மிஷ்கின், ஷங்கர் சாரை உட்கார வைத்து 25 வருடத்தை போற்றும் வகையில் 25 கிப்ட்களை கொடுத்தார். எத்தனை கோடி கண் வேண்டும் அதை காண... ஷங்கர் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
இயக்குநர் என்றவன் யார் ? அவனுக்கு என்ன சக்தியிருக்கிறது. என்பதை மணி சார் வார்த்தைகளில் கேட்க, மகுடிக்கு மயங்கி அத்தனை இயக்குநர்களும் அவர் காலில் விழுந்தோம். 'நாயகன்' எப்படி எடுத்தேன்? அக்னி நட்சத்திரம் முதல் கடல் வரை எப்படி எடுத்தேன்? என்ற தேவ ரகசியத்தை என்னிடமும் ராமிடமும் கூறினார். விழாவானது விடிய விடிய இசையும் பாட்டும் தொடர்ந்தது' இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.