மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் தான் இயக்கும் படங்களை மட்டுமல்லாது பிற இயக்குநர் படங்களையும் தயாரித்துவருகிறார். அந்த வகையில் தன்னுடைய உதவி இயக்குநர் தனா இயக்கும் படத்தை தயாரிக்கிறார்.

இயக்குநர் தனாவுடன் மணிரத்னமும் கதை வசனம் எழுதி வரும் இந்த படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். மேலும் விக்ரம் பிரபுவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறாராம். மேலும் சாந்தனு பாக்கியராஜ் ,சரத்குமார், ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர்.
'வானம் கொட்டட்டும்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்துக்கு பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைக்க, 'அபியும் நானும் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ப்ரீத்தா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்த படத்துக்கு கலை இயக்குநராக அமரனும், உடை வடிவமைப்பு பணிகளை ஏகா லகானியும் ஏற்றுள்ளனர். மெர்சல் பிகில் படங்களுக்கு பாடல் எழுதிய விவேக் இப்படத்திற்கு பாடல் எழுத உள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது இயக்குநர் தனா ஏற்கனவே விஜய் ஜேசுதாஸை ஹீரோவாக வைத்து 'படைவீரன்' படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.