விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் பிரபலமான ஒன்று குக் வித் கோமாளி. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி ஷோ பார்க்கப்படும் நிலையில், இதன் சிறப்பம்சமாக இருப்பதே சீரியஸான விஷயமாக இருக்கும் சமையலை மிகவும் வித்தியாசமாக பொழுதுபோக்கு மற்றும் விறுவிறுப்பு அம்சங்களுடன் காண்பிப்பது தான்.
இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல செஃப்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் மிகவும் அரட்டை அடித்து அனைவரையும் கலாய்த்துக் கொண்டே இருப்பதால் நிகழ்ச்சி இன்னும் சுவாரஸ்யமாகவும் செல்கிறது. இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து, 4 ஆவது குக் வித் கோமாளி சீசனும் தற்போது ஆரம்பமாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
குக் வித் கோமாளி 4 ஆவது சீசனில் மைம் கோபி, விசித்ரா, ஷெரின், ராஜ் ஐயப்பா, காளையன், கிஷோர் ராஜ்குமார், சிவாங்கி, ஸ்ருஷ்டி டாங்கே, விஜே விஷால், ஆண்ட்ரியா நவுரிகட் உள்ளிட்ட 10 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர். இவர்களுடன் பழைய மற்றும் புதிய கோமாளிகளும் கோதாவில் இறங்கியுள்ள சூழலில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி இன்னும் அமர்க்களமாக சென்று கொண்டிருக்கிறது.
முன்னதாக கடந்த மூன்று சீசன்களிலும் குக் வித் கோமாளி தொடரில் கலந்துகொண்டு பெரும் வரவேற்பை பெற்ற மணிமேகலை சில நாட்களுக்கு முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள பதிவில்,"இனி நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வரமாட்டேன் என்பதை நானே வருவேன் கெட்டப் மூலமாக அறிவிக்கிறேன். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் என் முதல் எபிசோடிலிருந்து என்னுடைய எல்லா பெர்ஃபாமன்ஸ்களுக்கும் நீங்கள் அன்பும் ஆதரவும் அளித்திருக்கிறீர்கள். அதற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். எனக்கு கிடைக்கும் எல்லா வாய்ப்புகளிலும் நான் அதிக கவனம் செலுத்தி சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறேன். குக் வித் கோமாளியில் உங்களை கொஞ்சம் மகிழ்வித்திருப்பேன் என நம்புகிறேன். நான் இனிமேலும் உங்கள் அன்பை எதிர்பார்க்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மணிமேகலையும் அவரது கணவர் ஹூசைனும், சொந்த ஊரில் பண்ணை வீடு கட்டுவதற்குஇ பாலக்கால் பூஜை செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக பேசியுள்ள மணிமேகலை, “கடவுளின் அனுகிரகத்தாலும் கடின உழைப்பாலும் எங்களது சின்ன மாளிகையை சொந்த ஊரில் கட்டுகிறோம். நாங்கள் கிராமத்துக்கு வரும்போதெல்லாம் இது மகிழ்ச்சியான இடமாக மாறப்போகிறது. எங்களை வாழ்த்துங்கள்.. இது எங்கள் கனவு” என குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் இருவரும் சாதித்துக் காட்டியதாகவும் இவர்களுக்கு நேர்ந்த பல அவமானங்களுக்கு பதிலடி என்றும் தெரிவித்துள்ளனர்.