இன்றைய சூழலில், நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள பெரும்பாலான வீடுகள், கடைகள் உள்ளிட்ட இடங்களில், பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவை இருக்கின்றன.
சாலைகளில் கூட, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட கொள்ளைக்குற்ற சம்பவங்களை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் இருக்கின்றன. இருந்தும் கொள்ளை சம்பவங்கள் சிறிதளவு குறைந்திருந்தாலும், எங்கோ ஓரிடத்தில் அவை தொடர்ந்துகொண்டும் இருப்பதையும் அவ்வப்போது காண முடிகிறது. இந்நிலையில் நடிகை ஒருவரிடம் திருடர்கள் வழிப்பறி செய்து, அவரை தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ளது கே.பி.ஆர் பூங்கா. செலிபிரிட்டிகள் பலரும் நடைபயிற்சி மேற்கொள்ளும் இந்த பூங்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 14) இரவு நடிகை ஷாலு சவுரேசியா (வயது 29) நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த மர்ம நபர் ஒருவர், அவரிடம் இருந்து பணம், மொபைல் போன் உள்ளிட்டவற்றை கேட்டு மிரட்டியிருக்கிறார்.
ஆனாலும், மிரட்டலுக்கு அடிபணியாத நடிகை ஷாலு சவுரேசியா அந்த மர்ம நபரை எதிர்த்து போராட, அந்த நபரோ, ஷாலு சவுரேசியாவை தலையில் தாக்கிவிட்டு, பின்னர் அவரிடம் இருந்த மொபைல் போனை வலுக்கட்டாயமாக பறித்துவிட்டு தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, நடிகை ஷாலு சவுரேசியா காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், காயத்துடன் தனியார் மருத்துவமனை சென்று சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் கூறப்பட்டு வருகின்றன.
தாக்குதலுக்கு ஆளானதாக கூறப்படும் நடிகை ஷாலு சவுரேசியா தமிழ், பாலிவுட், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழில் ‘அங்காடி தெரு’ மகேஷ் நாயகனாக நடிப்பில், 2019ல் வெளியான, ‘என் காதலி சீன் போடுறா’ எனும் படத்தில் நாயகியாக நடித்தவர்.
இதனிடையே இந்த வழிப்பறி மற்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருவதாக தெரிகிறது.