நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை 2021,டிச.23: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்தின் கதை ஏலியன்களை உள்ளடக்கியது என்பது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து தெரியவரும். தமிழ் சினிமாவில் இதுபோன்ற சயின்ஸ் ஃபிக்ஷன் கதைகள் முன்னளவில் பெரிதாக இல்லாமல் இருந்த நிலையில் தற்போது சயின்ஸ் ஃபிக்ஷன் கதைகள் வந்தவண்ணம் உள்ளன.
அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த் திரைப்படம் உருவாவது பற்றிய செய்தி வெளியானவுடனேயே ரசிகர்கள் இந்த திரைப்படத்தை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர். முன்னதாக படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கான திரைப்பட பணிகள் முடிவடைந்து கொண்டிருப்பதாக இப்படத்தின் இயக்குநர் பிஹைண்ட்வுட்ஸிடையே பிரத்தியேகமாக தெரிவித்திருந்தார்.
இயக்குநர் ரவிகுமார் ஏற்கனவே விஷ்ணு விஷால் நடிப்பில் இன்று நேற்று நாளை திரைப்படத்தை இயக்கியவர். காமெடியாகவும், எளிமையாகவும் அதே சமயம் வலுவான திரைக்கதை அமைப்புடனும் இந்த திரைப்படம் உருவாகி இருந்தது. இந்த திரைப்படம் ஹிட் அடித்ததை தொடர்ந்து இப்படத்தின் 2-ஆம் பாகமும் இயக்குநர் ரவிகுமாரின் எழுத்தில் தயாராகி வருகிறது. S.P.கார்த்தி இப்படத்தை இயக்குகிறார்.
இதனிடையே ரவிகுமாரின் அடுத்த படமாக உருவாகியுள்ளதுதான் சிவகார்த்திகேயன் நடிப்பிலான அயலான்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான்:
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடித்து வெளியீட்டுக்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தை, ஆர்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.
24.ஏ.எம்.ஸ்டுடியோஸ்:
இந்த திரைப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு, தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டேக் என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெங்கடேஷ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்ததாக தெரிகிறது.
அதன்படி அந்த மனுவில், டேக் என்டெர்டெயின்மென்ட், தங்கள் நிறுவனத்திடம் இருந்து 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் நிறுவனம் 5 கோடி கடனாக பெற்றிருந்ததாகவும், தற்போது வட்டியோடு சேர்ந்து அந்த கடனை திருப்பித்தர வேண்டும் என்றும் கோரியுள்ளது.
அயலான் படத்தை வெளியிட தடை:
இதனை அடுத்து, வரும் 2022, ஜனவரி 3-ஆம் தேதி வரை, அயலான் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
அத்துடன் மனுதாரர் தரப்புடனான இந்த பிரச்சனையை சுமுகமாக முடித்து கொள்வதும், மேற்கொண்டு இவ்வழக்கில் பதிலளித்து வழக்கை தொடர்வதும் அயலான் படத் தயாரிப்பு நிறுவனத்தின் விருப்பம் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.