தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகி இருந்த 'ப்ரின்ஸ்' திரைப்படம் வெளியாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, தற்போது மாவீரன் என்ற திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு மண்டேலா என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் முதல் படமாக உருவாகி இருந்த மண்டேலா படத்தில் யோகி பாபு, கண்ணா ரவி, ஷீலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், இரண்டு தேசிய விருதுகளையும் வென்று பாராட்டுக்களை பெற்றிருந்தது. தொடர்ந்து, மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகளும் நடிகையுமான அதிதி ஷங்கர் நடிக்கிறார். மேலும் மற்ற முக்கிய வேடத்தில் மிஷ்கின் & சரிதா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவீரன் படத்திற்கு தெலுங்கில் மஹாவீருடு என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் பிரின்ஸ் படத்தை தயாரித்த சாந்தி டாக்கிஸ் நிறுவனம் மாவீரன் படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கி இருந்தது. இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக விது ஐயனா பணிபுரிகிறார். பரத் சங்கர் இசையமைக்க உள்ளார். இவர்கள் ஏற்கனவே மண்டேலா படத்தில் பணிபுரிந்தவர்கள்.
இதனிடையே, மாவீரன் படத்தின் படப்பிடிப்பு குறித்து சில தகவல்கள் வேகமாக இணையத்தில் பரவி வந்தது. படப்பிடிப்பு தாமதம் ஆவது பற்றி சில விஷயங்கள், சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாற சற்று பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், தற்போது இது பற்றி மாவீரன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர்கள் செய்த ட்வீட்டில், "மாவீரன் படம் குறித்து ஆதாரமற்ற வதந்திகளும், பொய்யான செய்திகளும் தொடர்ந்து பரவி கொண்டே இருக்கிறது. அவற்றை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். மறக்கமுடியாத ஒரு படத்தை தர மாவீரன் படக்குழு தொடர்ந்து உழைத்து வருகிறது" என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், "வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்" என திருக்குறளை மேற்கோள் காட்டி, "வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களை சொல்லுதல் ஆகும்" என்ற விளக்கத்தையும் குறிப்பிட்டுள்ளனர்.