2020 ஆம் ஆண்டுக்கான 68 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, புது டில்லியில் இன்று (30.09.2022) நடைபெற்றது.
ஜனாதிபதி திரௌபதி முர்மு விழாவுக்கு தலைமை தாங்கி திரைக்கலைஞர்களுக்கு விருது வழங்கினார். மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன், இயக்குனர் பிரியதர்ஷன் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர். இதில் தமிழகத்தை சார்ந்த சினிமா கலைஞர்கள் பலர் விருது பெற்றனர்.
இளம் இயக்குனர் மடோன் அஸ்வின் இரண்டு தேசிய விருதுகளை மண்டேலா படத்திற்காக பெற்றார். சிறந்த அறிமுக இயக்குனர் & சிறந்த வசனகர்த்தா ஆகிய இரண்டு விருதுகளையும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கையிலிருந்து பெற்றார். கடந்த ஆண்டு ஏப்ரலில் அறிமுக இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு, ஷீலா ராஜ்குமார் நடிப்பில் மண்டேலா படம் வெளியானது.
விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் இந்த படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் மற்றும் விஷ்பெர்ரி நிறுவனங்களுடன் இணைந்து Y Not ஸ்டுடியோஸ் சசி காந்த், இயக்குனர் பாலாஜி மோகன் விண்டோ நிறுவனம் இணைந்து தயாரித்து இருந்தன.
இந்த படத்தில் யோகிபாபு, ஷீலா உடன் சங்கிலி முருகன், ஜி.எம்.சுந்தர், கண்ணா ரவி உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்திற்கு விது ஐயண்ணா ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங்கை பிலோமின் ராஜ் கையாண்டார். இந்த படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்தார்.
சிவகார்த்திகேயன் அடுத்த படமாக மாவீரன் படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார்.
சில நாட்களுக்கு முன் இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது. இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக விது ஐயனா பணிபுரிகிறார். பரத் சங்கர் இசையமைக்க உள்ளார். இவர்கள் ஏற்கனவே மண்டேலா படத்தில் பணிபுரிந்தவர்கள்.