வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி, கடந்த நவ-25ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது மாநாடு திரைப்படம்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், வாகை சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், டேனி, அஞ்சனா கீர்த்தி, அரவிந்த் ஆகாஷ் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியில் உருவான இந்தப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இந்த படத்தின் வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்த படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் இந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவரும் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
இந்த விழாவில் பேசிய இயக்குனர் வெங்கட்பிரபு பேசும்போது, “இந்த படத்தின் கதையை சொன்னபோது உடனே ஒப்புக் கொண்ட சிம்பு, இந்த படத்தை ஃபிரஷ்ஷா புது டீமோட வொர்க் பண்ணலாம்ன்னு சொன்னார்.. இந்த படத்தோட கதைய முதல்ல டைம் லூப் இல்லாமல்தான் தயார் பண்ணி இருந்தேன்.. ஆனால் அந்த சமயத்தில் என்ஜிகே, சர்க்கார் போன்ற படங்கள் இதே அரசியல் பின்னணியில் வெளியானதால், அதன்பிறகுதான் டைம் லூப்புக்கு கதையை மாற்றினோம்” என்று கூறியிருந்தார்.
மேலும் இப்படத்தில் இடம் பெற்ற பாடல் குறித்து பேசிய அவர், “இந்த படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே இருந்தது. அதில் மாஷா அல்லா என்கிற வார்த்தையை பயன்படுத்தினோம். முதலில் அந்தப்பாடலை எழுதி படமாக்கியும் விட்டோம். அதன்பின் யுவன் சங்கர் ராஜாவும் அவர் மனைவியும் சொன்ன பார்வை மற்றும் சில யோசனைகளுக்கு பின், பாடலாசிரியர் மதன் கார்க்கி மெஹ்ருசைலா என்கிற புதிய வார்த்தையைக் கண்டுபிடித்து மாற்றி எழுதிக் கொடுத்தார்.” என்று குறிப்பிட்டிருந்தார்.