சென்னை 28, மங்காத்தா உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர் சிம்புவை வைத்து 'மாநாடு' என்னும் திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் வெளியாகி இருந்த மாநாடு திரைப்படம், அந்த ஆண்டின் சிறந்த தமிழ் படங்களில் ஒன்றாகவும் உருவாகி இருந்தது.
தமிழ் சினிமாவிற்கு சற்று புதிதான டைம் லூப் என்னும் கதையை கையில் எடுத்த இயக்குனர் வெங்கட்பிரபு, அதனை மிகவும் நேர்த்தியாக அமைத்து, அனைத்து விதமான மக்களுக்கும் புரியும் வகையில் உருவாக்கி இருந்தார்.
பெரிய அளவில் வெற்றி..
மாநாடு திரைப்படத்தில், நடிகர் சிம்புவுடன், எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய்.ஜி. மகேந்திரன், கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு பிரவீன் கே.எல் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். மேலும், மாநாடு திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து இருந்தார்.
வெங்கட்பிரபுவின் இயக்கம், சிம்பு, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டோரின் நடிப்பு, யுவனின் இசை, பிரவீனின் எடிட்டிங் என அனைத்து விஷயமும் மாநாடு படத்திற்கு பெரிய பிளஸ்ஸாக இருந்தது. இதனால், தமிழகம் மட்டுமில்லாமல், மற்ற அனைத்து மாநிலங்களிலும் பெரிய அளவில் வெற்றி நடை போட்டது மாநாடு திரைப்படம்.
முழு வசூல் என்ன??
இந்நிலையில், உலகளவில் மாநாடு படத்தின் முழு வசூல் என்ன என்பது பற்றி, அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், "எங்களின் மாநாடு திரைப்படம், உலகளவில் 117 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்ததை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஆண்டின் மெகா பிளாக்பாஸ்டர் திரைப்படம் ஆகவும் மாநாடு அமைந்துள்ளது" என குறிப்பிட்டு, சிலம்பரசன், வெங்கட் பிரபு, எஸ்ஜே சூர்யா, யுவன் ஷங்கர் ராஜா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் தனது நன்றிகளையும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.