விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் பாடலாசிரியர் விவேக் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
சமீபத்தில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் "ரஞ்சிதமே" வெளியாகியுள்ளது.
இந்த பாடலை நடிகர் விஜய் & மானசி பாடியுள்ளனர். ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். தமன் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதி உள்ளார்.
இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் தற்போது 40 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
வாரிசு படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் அஜித்குமார் நடிக்கும் 'துணிவு'படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது.
முன்னதாக தொகுப்பாளர் கேள்வி கேட்கும் போது தொடர்ச்சியாக விஜய் பாடத்தின் பாடல்கள் அஜித்துக்கான கவுண்ட்டராகவும், அஜித் படத்துக்கான பாடல்கள் விஜய் படத்துக்கான கவுண்ட்டராகவும் இருப்பதாக கருதப்பட்டது. இப்போதும் அவை தொடர்வதாக எண்ணுகிறீர்களா.? எனக் கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த பாடலாசிரியர் விவேக், "உச்ச நடிகர்கள் செய்யக்கூடிய இந்த விஷயங்கள் இப்படி பார்க்கப்படுவது எதார்த்தமாகி போய்விட்டதாகவே கருதுகிறேன்.
ஆனால் உண்மையில் இந்த விஷயங்களை கருதி அவர்கள் அப்படி நடந்து கொண்டிருக்க மாட்டார்கள் என்பதே எனக்கு தோன்றும். பாடல் ஆசிரியர்கள், இசையமைப்பாளர்கள் இயல்பாகச் செய்யக்கூடிய, யோசிக்க கூடிய இந்த விஷயங்கள் மீது பலரும் தங்களுடைய கற்பனை கருத்துக்களைக் கொண்டு இப்படியான முடிவுக்கு வந்திருக்கலாம்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நடிகர்களாகட்டும் நாங்களாகட்டும் உண்மையில் இப்படியான விஷயங்கள் அர்த்தம் புரிந்து கொள்ளப்படுமாயின் அவற்றை தீர்க்கமாக தவிர்க்கவே முற்படுவோம்.
படக்குழுவினரும் அதையே விரும்புவார்கள். யாரும் இன்னொருவரின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணம் ஆகிவிட முடியாது. தடுக்கவும் முடியாது. அதைச் செய்யவும் மாட்டார்கள்.. திரைத்துறையில் அப்படி யாருமே செய்ய மாட்டார்கள்" என்று பாடலாசிரியர் விவேக் கூறினார்.