இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய தேசிய விருது வென்ற பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெருந்தனமை குறித்தும், காப்பான் டீம் குறித்தும் பேசினார்.
‘காப்பான்’ இசை வெளியீட்டு விழாவிற்கு இயக்குநர் ஷங்கர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து பேசுகையில், ‘இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் சூப்பர் ஸ்டாரின் பெருந்தன்மையை பற்றி பேச வேண்டும்.. பொருளை பகிர்வது தானம் அல்ல, ஒரு மனிதன் புகழையும் பகிர்ந்து கொடுப்பது தான் தானம்.. வளர்ந்த கலைஞர்களுக்கு தனது புகழை பகிர்ந்து கொடுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எனது பாராட்டுக்கள’ என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து பேசிய வைரமுத்து, ‘இயக்குநர் ஷங்கரின் பெருமை என்றால் பிரம்மாண்டத்திற்கு கீழே இருக்கும் நுட்பம், கடின உழைப்பு, வெறி அதனை தான் ஷங்கரின் பெருமையாக கருதுகிறேன். அவருக்கு எனது வாழ்த்துக்கள். லைகா நிறுவன தயாரிப்பாளர் சுபாஸ்கரனை பாராட்ட விரும்புகிறேன். தமிழ்நாட்டில் இருப்பது இரண்டு பெரும் பஞ்சம் தண்ணீர் மற்றும் தயாரிப்பாளர் பஞ்சம் இருக்கிறது, அதனை தீர்க்க பல பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே எனக்கு அவரை தெரியும். அவரது தாயாருக்காக என்னிடம் கவிதை எழுதி பெற்றவர்’.
‘கே.வி.ஆனந்த் தன்னை எப்போதும் புதுப்பித்துக் கொண்டே இருப்பவர். எனக்கு சமூக பொறுப்புண்டு என்பதை நிரூபித்து, கலையோடு சமூகத்தை கலந்து பார்க்கும் ஒருசிலரில் மிகச்சிறதவராக சூர்யா திகழ்கிறார். ஒரு படத்தில் இடம்பெறும் அத்தனை பாடல்களும் ஹிட்டாக வேண்டும் என்று நினைப்பவர் ஹாரிஸ், அவருக்கு எனது வாழ்த்துக்கள். இப்படத்தில் எனக்கு ஒரு சிறு துளி பங்கிருப்பதால் பெருமையடைகிறேன்’ என வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இன்றைய திரைப்பட பாடல்களில் மொழியின் மேன்மை, செம்மை, ஆளுமை, சமூக நேசம் கொஞ்சம குறைந்துக் கொண்டிருப்பதாக தமிழ் சமூகம் கருதுகிறது. சமூக அக்கறையுள்ள கதாநாயகர்கள், இளைஞர்களை மேம்படுத்தும், நம்பிக்கை ஊட்டும், ஊக்குவிக்கும் வகையிலான பாடல்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற தனது வேண்டுகோளையும் வைரமுத்து முன்வைத்தார்.