மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ்.
லோகேஷ், அடுத்ததாக கார்த்தியை வைத்து 'கைதி' என்னும் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இதற்கு அடுத்தபடியாக, விஜய்யை வைத்து 'மாஸ்டர்' திரைப்படத்தை லோகேஷ் இயக்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோரை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார்.
‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. நடிகர் சூர்யா ரோலக்ஸ் எனும் பெயரில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். காளிதாஸ் ஜெயராமன் கமலின் மகனாக 'பிரபஞ்சன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மைனா நந்தினி, ஷிவானி, மகேஸ்வரி நடித்துள்ளனர்.
விக்ரம் படத்தின் ஆக்சன் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்து வருகிறது. விக்ரம் படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் & நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு 'லெக்ஸஸ்' ரக காரை பரிசாக அளித்துள்ளார்.
இந்நிலையில் விக்ரம் படம் குறித்த டிவிட்டர் லைவ் கேள்வி பதிலுக்கு லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்தார். டிவிட்டர் நிறுவனம் சார்பில் இந்த நிகழ்வு ப்ரோமோட் செய்யப்பட்டது. இதில் ரசிகர் ஒருவர், " ஒரு இயக்குனராக விக்ரம் படத்தில் இந்த ஒரு விஷயத்தை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்றால் அது எது" என கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த கேள்விக்கு லோகேஷ், "இன்னும் கூடுதல் நேரம் இருந்திருந்தால் VFX இன்னும் சிறப்பாக வந்திருக்கும்" என பதில் அளித்தார்.