லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் நடித்துள்ள திரைப்படம் 'விக்ரம்'. இதில், கமலுடன் நடிகர்கள் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அதே போல, நடிகர் சூர்யாவும் கவுரவ தோற்றம் ஒன்றில் நடித்துள்ளது பற்றி, ஏற்கனவே அதிகாரபூர்வ தகவல் வெளியாகி இருந்தது.
விக்ரம் திரைப்படம், நாளை (03.06.2022) வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் என அனைத்தும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை வேற லெவலில் எகிற வைத்துள்ளது. இதனால், திரைப்படம் வெளியாகும் நேரத்தை, ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி காத்து வருகின்றனர். பேன் இந்தியன் திரைப்படமாக உருவாகி உள்ள விக்ரம் படத்தின் முன்பதிவும், கடந்த சில தினங்களுக்கு முன், உலகளவில் ஆரம்பமாகி இருந்தது.
லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அறிக்கை
இதனிடையே, விக்ரம் படம் வெளியாக இன்னும் சில மணி நேரமே இருக்கும் நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ள ட்வீட் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. கமலுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த லோகேஷ், அதனுடன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "வணக்கம் நண்பர்களே, இதுவரை பட வெளியீட்டுக்கு முன் நான் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதில்லை. நினைவு தெரிந்த நாள் முதல் என் சின்ன வயதிலிருந்தே "உலக நாயகன்" ரசிகனாகவே இருந்திருக்கிறேன். இன்றைக்கு அவரது படத்தை இயக்கியிருக்கிறேன், இன்னமும் இது ஒரு கனவைப் போலிருக்கிறது. இதனை வெற்றிகரமாக நிறைவேற்ற எனக்குத் துணை நின்ற நல்லுள்ளங்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கைதி'ய மறுபார்வை பாத்துட்டு..
விக்ரம் பட வேலைகளைத் தொடங்கிப் பதினெட்டு மாதங்கள் ஆகின்றன. ரத்தமும் வியர்வையும் சிந்தி (உண்மையாகவும் கூட) ரசிகர்களான உங்களை மகிழ்விக்கவும், ஒரு மனிதரை, நம் நாட்டின் பெருமிதத்தை , "உலக நாயகன்" கமல்ஹாசனைக் கொண்டாடவும் உழைத்திருக்கிறோம். வாய்ப்புக்கு நன்றி சார், இந்தத் திரைப்படம் உங்கள் ரசிகனிடமிருந்து உங்களுக்கான பரிசாக வருகிறது! இதை நான் என்றென்றும் மகிழ்வுடன் நினைவில் சேமித்திருப்பேன்!
என் அன்பான ரசிகர்களுக்கு, இன்னும் சில மணி நேரங்களில் விக்ரம் திரைப்படம் முழுக்க உங்கள் சொந்தமாகிவிடும். அது உங்களை மகிழ்வித்து, மறக்கமுடியாத மகத்தான திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்! "கைதி"யை இன்னொருமுறை மறுபார்வை பார்த்துவிட்டு "விக்ரம்" அழைத்துச் செல்லும் உலகுக்கு வாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். என்றும் அன்புடன், லோகேஷ் கனகராஜ்" என தனது அறிக்கையில் லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டுள்ளார்.
விக்ரம் படத்தின் டிரைலர் வந்த சமயத்தில், லோகேஷ் இயக்கிய கைதி படத்துடன் நிறைய தொடர்பு இருப்பதாக, ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். அதனை உண்மை ஆக்கும் வகையில், லோகேஷ் அறிக்கையில் கைதி படத்தை மறுபார்வை பார்த்து விட்டு வாருங்கள் என தெரிவித்துள்ள் கருத்து, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.