தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். 'மாநகரம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியிருந்த லோகேஷ் கனகராஜ், அதன் பின்னர் கார்த்தியை வைத்து 'கைதி' என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டாகி இருந்தது.
அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், தனது மூன்றாவது படத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோருடன் மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைய, தனது நான்காவது படத்தில் கமல்ஹாசனை இயக்கும் வாய்ப்பும் லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்திருந்தது.
இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அதேபோல படத்தின் இறுதி காட்சியில் சிறப்பு தோற்றத்திலும் நடிகர் சூர்யா தோன்றியிருந்தார். கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படமாகவும் விக்ரம் மாறி இருந்தது. அதுமட்டுமில்லாமல் கைதி, விக்ரம் உள்ளிட்ட பல படங்களை இணைக்கும் வகையில், LCU Universe என்ற ஒரு விஷயமும் விக்ரம் படத்தின் மூலம் உருவாகியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 படம் குறித்து நிறைய தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. பிப்ரவரி 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அதிகாரபூர்வ அறிவிப்பு என்றும் லோகேஷ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், Behindwoods சார்பில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் லோகேஷ் கனகராஜ், தளபதி 67 திரைப்படம் குறித்தும், இதற்கு முன்பு அவர் இயக்கிய திரைப்படங்கள் குறித்தும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அந்த சமயத்தில் சில மீம்ஸ்கள் அங்கே காண்பிக்கப்பட, அது பற்றி லோகேஷ் கருத்து தெரிவித்திருந்தார்.
அப்போது லோகேஷ் கனகராஜ் படத்தில் நடித்துள்ள கமல்ஹாசன், விஜய், சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய நான்கு பேர் ஒரே ஃப்ரேமில் வர ஏதாவது வாய்ப்புள்ளதா என ரசிகர்கள் ஆசைப்படுவது போல ஒரு மீம் காண்பிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், "எனக்கும் பெருசா ஆசை இருக்கு. இது பண்ணனும்ன்னு எல்லாருக்கும் ஆசை தானே. இந்த யூனிவர்ஸ் முடியணுன்னா அப்படித்தான் ஆகும். ஆனா எல்லாத்துக்கும் கொஞ்சம் டைம் ஆகும்" என பதில் தெரிவித்தார்.
ஏற்கனவே கமல்ஹாசன், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் விக்ரம் மற்றும் கைதி படங்கள் காரணமாக லோகேஷ் யூனிவர்ஸில் இணைந்தது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் தற்போது தளபதி 67 படம், லோகேஷ் யூனிவர்ஸில் இணையும் பட்சத்தில், நிச்சயம் இந்த நான்கு நடிகர்களும் ஒரே படத்தில் இணைவதற்கு ஏதேனும் வாய்ப்புகள் இருக்கிறது என்றும் தெரிகிறது.
அப்படி ஒரு சூழலில், தற்போது இந்த மீமுக்கும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ள கருத்து நிச்சயம் வருங்காலத்தில் அவர் இயக்கும் படத்தில் நான்கு பேர் ஒரே நேரத்தில் வருவார்கள் என்று ஆவலையும் ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி உள்ளது.