குறும்படங்கள் இயக்கி, அதில் கிடைத்த புகழ் மூலம் தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக உயர்ந்தவர் லோகேஷ் கனகராஜ்.

இவரது இயக்கத்தில் அறிமுக படமான 'மாநகரம்' திரைப்படம், ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் லோகேஷ் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருந்தது.
லோகேஷ் கனகராஜ்
தொடர்ந்து, கார்த்தியை வைத்து 'கைதி' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இந்த திரைப்படமும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற, அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து அவர் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படம், பிளாக்பாஸ்டர் ஹிட் அடித்து, லோகேஷை இன்னும் உயரத்திற்கு கொண்டு சென்றிருந்தது.
விக்ரம் திரைப்படம்
இதன் பிறகு, உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்' என்னும் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில், கமலுடன் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகியோரும் நடித்துள்ளனர். லோகேஷின் மற்ற திரைப்படங்கள் போல, இதற்கும் மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ரிலீஸ் தேதி அப்டேட்
கமல்ஹாசனின் தீவிர ரசிகனான லோகேஷ் இயக்கியுள்ள இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோக்கள், படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்தது. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளான இன்று (மார்ச் 14), விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி, மேக்கிங் வீடியோ ஒன்றுடன் கூடிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருந்தது.
வாழ்த்திய நெல்சன்
இது தொடர்பான வீடியோக்களும், அதிகம் வைரலாகி வருகிறது. மேலும், இது தொடர்பாக கமல்ஹாசன் பகிர்ந்திருந்த ட்வீட்டைக் குறிப்பிட்டு, "நன்றி ஆண்டவரே" என லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்திருந்தார். இதனை, 'பீஸ்ட்' திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பகிர்ந்து, லோகேஷிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை நெல்சன் தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி சொன்ன லோகேஷ், நெல்சனிடம் கேட்ட ஒரு விஷயம் தான் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் வைரலாகி வருகிறது.
பீஸ்ட் அப்டேட்
நெல்சனுக்கு நன்றி சொன்ன லோகேஷ், அத்துடன் "பீஸ்ட் அப்டேட் ப்ளீஸ்" என்றும் கேட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம், பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிளாக அரபிக்குத்து வெளியாகி, இன்று வரை வைரலாக பிரபலங்கள் மத்தியிலும் சக்கை போடு போட்டு வருகிறது.
வைரல் கமெண்ட்
ஏப்ரல் மாதம் பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் என கூறப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, திரைப்படம் குறித்த எந்த அப்டேட்டும் வரவில்லை. ரசிகர்களும் இதனை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில், முந்தைய விஜய் படத்தின் இயக்குனரும் இது பற்றி தற்போது கேட்டுள்ளது, ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.
இதனிடையே, மற்றொரு இயக்குனரான ரத்னகுமார், லோகேஷ் கமெண்ட்டின் கீழ், "Expect the Unexpected" என குறிப்பிட்டுள்ளார். இதன் கீழும் ரசிகர்கள் பல விதமான கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.