பிரபல இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் இயக்கத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான படம் 'லிட்டில் ஜான்'. தமிழ்நாட்டில் உள்ள மூக்குத்தி அம்மனின் சக்தி குறித்து கேள்விப்பட்டு ஆராய்ச்சி செய்ய வரும் அமெரிக்க இளைஞர் குறித்த கதை.
ஜான் என்ற அமெரிக்கராக பென்ட்லி மிட்சம் நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க, அனுபம் கெர், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அம்மனின் மூக்குத்தியை திருடிவிட்டதாக போலீஸ் தேடுகையில் ஜான் மீது குற்றம் இல்லையென தெரிந்து தனது மந்திர சக்தியால் ஜானை குட்டியாக்கிவிடுவார் அனுபம் கெர்.
அதன் பிறகு லிட்டில் ஜான் தன் மீது குற்றம் இல்லை என்பதை எப்படி நிரூபிக்கிறார் என்பதை காமெடி கலாட்டக்களுடன் சொல்லியிருப்பார் இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ். குறிப்பாக தமிழில் கிரேஸி மோகனின் வசனங்கள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் இருக்கும். இப்பொழுதும் இந்த படத்தை டிவியில் போட்டால் அனைவரும் டிவி முன் தான் உட்கார்ந்திருப்பர். இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகப்போகிறது.
இந்த படத்தில் ஜானாக நடித்த பென்ட்லியை அதன் பிறகு தமிழில் எந்த படத்திலும் பார்க்க முடியவில்லை. இதனையடுத்து அவர் Behindwoods சேனலுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது அந்த படத்தின் படப்பின் போது நடைபெற்ற சுவாரஸிய நிகழ்வுகள் குறித்து பகிர்ந்து கொண்டார். அவரது இன்டர்வியூக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அப்போது பேசிய அவர் ''என்னிடம் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் தொடர்பு கொண்டு லிட்டில் ஜான் 2.0 குறித்து கேட்கிறார்கள். எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்'' என்றார்.