‘பேரன்பு’ திரைப்படத்தை தொடர்ந்து அஞ்சலி நடிப்பில் ‘லிசா’ என்ற திகில் திரைப்படம் உருவாகியுள்ளது.
பிஜி முத்தையா தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லிசா’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் சாம் ஜோஸ் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும், மைம் கோபி, யோகி பாபு உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், Behindwoods தளத்துக்கு பிரத்யேக பேட்டியளித்த நடிகை அஞ்சலி, லிசா திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர், பெண்ணுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படியான கதைக்களத்தில் நடித்திருப்பதில் மகிழ்ச்சி. ஏற்கனவே பலூன் என்ற ஹாரர் படத்தில் நடித்த அனுபவம் இருப்பினும், லிசா வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது என்றார்.
மேலும், நிஜ பேய் எப்படி இருக்கும் என விஜேவுக்கு எடுத்து சொல்லிய அஞ்சலி, தனது சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவம் குறித்தும் பகிர்ந்துக் கொண்டார். ஒரு வீட்டில் குடியேறச் சென்றபோது அந்த வீட்டில் பேய் இருப்பதாக கூறினார்கள், பூஜை எல்லாம் செய்துவிட்டு வீட்டில் இருக்கலாம் என்று பார்த்தால், நள்ளிரவு 12 மணிக்கு கதவு தட்டும் சத்தம் வரும், அந்த பயத்திலேயே அந்த வீட்டில் தங்காமல் வேறு வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறினார்.
‘லிசா’ திரைப்படம் மட்டுமல்லாமல், விஜய் சேதுபதியுடன் ‘சிந்துபாத்’, சசிக்குமாருடன் ‘நாடோடிகள்’ ஆகிய திரைப்படங்களில் நடிகை அஞ்சலி நடித்து வருகிறார்.