நடிகர் அருண் விஜய், இயக்குநர் ஹரி கூட்டணியில் “யானை” திரைப்படம் ஜூலை 1-ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்திற்காக இராமேஸ்வரம், தூத்துகுடி, காரைக்குடி, பழனி மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. நடிகர் அருண் விஜய் இதுவரை ஏற்றிராத வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். கிராமம் மற்றும் நகர பின்னணியில் தன் வழக்கமான விறுவிறுப்பான திரைக்கதையுடன் இயக்குநர் ஹரி அட்டகாசமாக இப்படத்தை இயக்கியுள்ளார்.
படத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல்விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் யூடிப் சேனலுக்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்த இயக்குநர் ஹரி பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். அப்போது, “சிங்கம் படத்தில் சூர்யா சார் போலீஸாக வருவார். ஒரு போலீஸ் ஆபீசர் அடுத்து என்ன ஆகவேண்டும் என கூறும்போது எஸ்.பி, ஐஜி என கூறுவதற்கு பதிலாக மளிகை கடை வைக்க வேண்டும் என கூறுதாக வைத்திருப்பீர்கள், உங்களுக்கும் அப்படித்தான் தோன்றுகிறதா? அதன் பின்னணி என்ன?” என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் கூறிய இயக்குநர் ஹரி, “ஆமா.. எனக்கும் அந்த ஆசை இருக்கு.. ஆசை இருக்குன்னா அது ஒரு பேஷன் கிடையாது. அது ஒரு வளமான தொழில். உணவுப்பொருட்களை டீல் பண்ணுவது வேற.. நாங்க மளிகை கடையில வேலை செய்யும்போது ஒரு கொட்டாங்குச்சி எடுத்து 4 கடலை, கொஞ்சம் மிளகாய் பொடி, நல்லெண்ணெய், பூண்டு சேர்த்து நுணுக்கி சாப்பிட்டால் பேல் பூரி லெவல்லில் ஒரு பதார்த்தம் கிடைக்கும்..
அந்த டிரெய்னிங்கே வேற.. விவசாயத்துக்கு அடுத்த ஒரு சேவை மளிகை கடை. ஒரு சில பொருட்களுக்கு தான் தேவை இருக்கும். ஆனால் அதற்காக ஒரு கடை அமைத்து, ஒவ்வொரு பொருளையும் பல மடங்கு வாங்கி வந்து வைத்து பராமரித்து - அதில் 5 பைசா, 10 பைசா தான் அந்த காலத்தில் எல்லாம் கூடுதலாக கிடைக்கும். அது நிறைய அனுபவங்களை கற்றுக்கொடுக்கும். நான் சொல்வது இந்த தலைமுறைக்கு எப்படி புரியும் என்று தெரியவில்லை.” என்று பதில் கூறினார்.
மேலும் பேசியவர், “ஓரளவுக்கு தேவையான அப்கிரேடு விஷயங்களை தான் சினிமாவில் சொல்லியிருப்பேன். சிங்கம்-2வில் கூகுள் மேப்பை எவ்வளவு வெச்சு செய்ய முடியுமோ என செஞ்சிருப்பேன். அனைவரும் கூகுள் மேப்பில் தான் வீட்டை காட்டுகிறார்கள். நானும் போனில் மேப்பை தான் நோண்டிக் கொண்டிருப்பேன். எனக்கு அதில் ஆர்வம் உண்டு, அதனால் சாட்டிலை ஷாட் என் படங்களில் வருகிறது, யானை படத்தில் எமோஷனலாக நல்லனுபவம் ஃபேமிலி ஆடியன்ஸ்க்கு கிடைக்கும். அந்த எமோஷனும் செயற்கையாக இருக்காது. அதனால் பல இடங்களில் சிங்கிள் ஷாட் முயற்சித்திருப்பேன். அந்த ஒரிஜினல் எமோஷன் மக்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.