இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் புதிய திரைப்படத்துக்கான பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன.
இந்நிலையில் இந்த கூட்டணி மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் பாண்டிராஜ் தற்போது படக்குழுவினரிடையேயான கலந்துரையாடலின் போது பேசியுள்ள ஆடியோ க்ளிப் வைரலாகி வருகிறது. கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய கடைக்குட்டி சிங்கம் படத்தின் வரவேற்பு கார்த்தி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
நடிகர் கார்த்தி, சத்யராஜ், சயீஷா, ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் பலர் நடித்த இந்த படம் குடும்பத்திரைப்பட ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. இதேபோல் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று படம் நேரடியாக வெளியானாலும் ரசிகர்களிடையே பெரும் பிரம்மாண்டத்தையும் உற்சாகத்தையும் உண்டுபண்ணியது. சூர்யாவின் இந்த மாபெரும் ஹிட் படத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் சூர்யாவை இயக்குவதற்குத் தயாரானார்.
இந்நிலையில் அண்மையில் சூர்யா நடிப்பில் தான் இயக்கும் படம் பற்றி தன் வட்டாரத்தில் கலந்துரையாடிய பாண்டிராஜ், “கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தி சார் ரசிகர்கள் எப்படியெல்லாம் என்ஜாய் செய்தார்களோ, அதேபோல் சூர்யா ரசிகர்களும் இதில் ஒவ்வொரு மொமண்டையும் என்ஜாய் பண்ணுவார்கள். அதனால் தான் டைட்டில் லுக் தொடங்கி ஒவ்வொரு விஷயத்திலும் பார்த்து பார்த்து டைம் எடுத்து பண்ணிக் கொண்டிருக்கிறோம். தற்போது கார்த்தி சார் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லி பதிவிட்டபோது கூட பலரும் சூர்யா சார் படத்துக்கான அப்டேட்டுகளை வரிசைகட்டி கேட்டனர்!” என்று சிலாகித்து பேசியுள்ளார்.
இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரத்னவேலுவும், இசையமைப்பாளராக இமானும் பணிபுரிந்து வருகிறார்கள். மேலும் சத்யராஜ், ப்ரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.
ALSO READ: "கண்கள் கண்ணீரில் .. அதுதான் கடைசினு இருவருக்குமே தெரியாது!" - சோகத்தில் டி.இமான்!