‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹீரோ’ திரைப்படத்தின் ரிலீசையொட்டி, அதிநவீன தொழில்நுட்பத்திலான கேம் ஒன்றை படக்குழு நாளை அறிமுகம் செய்யவுள்ளது.
‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹீரோ’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். கல்யாணியுடன் ‘நாச்சியார்’ பட நடிகை இவானா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், ரோபோ ஷங்கர், அபய் தியோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் விறுவிறுப்பான டீசரை கடந்த சில நாட்களுக்கு முன் பாலிவுட் நடிகர் சல்மான் கான் வெளியிட்டார். கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர்.20ம் தேதி ரிலீசாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தி புரொமோஷனுக்காக இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஆக்மெண்டட் ரியாலிட்டி கேம் ஒன்றை ‘ஹீரோ’ படக்குழுவினர் நாளை (நவ.24) அறிமுகம் செய்யவுள்ளனர். நிஜ உலகில் இருப்பவரை மாய உலகிற்கு அழைத்துச்செல்வது வர்ச்சுவல் ரியாலிட்டி என்றால், நிஜ உலகத்திலேயே மாய உலகத்தை இணைப்பதுதான் ஆக்மெண்டட் ரியாலிட்டி.
நிஜ உலகின் மீது ஒரு டிஜிட்டல் லேயரைச் சேர்க்கும் இந்த ஆக்மெண்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்திலான ‘ஹீரோ’ கேம் ஒன்றை படக்குழுவினர் நாளை மாலை 5 மணிக்கு அறிமுகம் செய்யவுள்ளானர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி பரபரப்பை ஏற்படுத்திய ‘போக்கிமான் கோ கேம்’ ஆக்மெண்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்திலான கேம் என்பது குறிப்பிடத்தக்கது.