தமிழகத்தில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சியில் அக்கட்சியின் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய கமல்ஹாசன், “முஸ்லீம்கள் நிறைய பேர் இருப்பதனால் சொல்லவில்லை. காந்தியின் சிலைக்கு முன் பேசுகிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே. அங்கு இருந்து தொடங்குகிறது. நான் மகாத்மா காந்தியின் மானசீக கொள்ளு பேரன். அவரது கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன் என நினைத்துக் கொள்ளுங்கள்.
இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக, மூவர்ணக் கொடியே இருக்கும் இந்தியாவாக இருக்க வேண்டும் என்பது தான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன் என மார்தட்டிச் சொல்வேன்” என்று கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
கமல்ஹாசனின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நீங்கள் பெரிய நடிகர் கமல் சார். கலையை போல தான் தீவிரவாதத்திற்கும் மதம் இல்லை. கோட்சேவை தீவிரவாதி என சொல்லலாம், அவர் இந்து என ஏன் குறிப்பிட வேண்டும். முஸ்லீம்களின் வாக்குகளை பெற இப்படி பேசினீர்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “பெரிய நடிகர்கள் முதல் சிறிய நடிகர்கள் வரை கேட்டுக் கொள்கிறேன். நாட்டை பிரிக்காதீர்கள். நாம் அனைவரும் ஒருவரே. ஜெய் ஹிந்த்” எனவும் விவேக் ஓபராய் ட்வீட் செய்துள்ளார்.