புகழ்பெற்ற திரைப்பட இயக்குனரும் திரைக்கதை எழுத்தாளருமான பாசு சாட்டர்ஜி மறைந்தார். அவருக்கு வயது 90
'சோடி ஸி பாத்', 'சித்சோர்', 'ராஜநிகந்தா', 'பியோம்கேஷ் பக்ஷி', சமேலி கி ஷாதி, ரஜ்னிகாந்தா, பாதோன் பாதோன் மெய்ன் உள்ளிட்ட படங்களை அவர் இயக்கியுள்ளார். அவர் இயக்கிய‘துர்கா’ என்ற படம் சிறந்த குடும்ப படத்திற்கான தேசிய திரைப்பட விருதை அவருக்கு பெற்றுத் தந்தது.
திரைப்பட தயாரிப்பாளரும், இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி இயக்குநர்கள் சங்கத்தின் தலைவருமான அசோக் பண்டிட் தனது ட்விட்டரில் பாசு சாட்டர்ஜியின் மறைவுச் செய்திகளைப் பகிர்ந்து தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். அதில் அவர் குறிப்பிட்டது, “பழம்பெரும் திரைப்பட இயக்குனர் பாசு சாட்டர்ஜி ஜியின் மறைவை உங்களுக்குத் தெரிவிக்க நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவரது இறுதி சடங்குகள் இன்று மதியம் 2 மணிக்கு சாண்டா க்ரூஸ் கிரீமேஷனில் நடைபெறும். அவரது மறைவு திரைத்துறைக்கு பெரும் இழப்பு. மிகவும் வருத்தம் அடைகிறோம் #RIPBasuChaterjee” என்று பதிவிட்டிருந்தார்.
இயக்குனர் பாசு சாட்டர்ஜி ஹிந்தி திரையுலகம் மட்டுமல்லாமல், வங்காள மொழிப் படங்களையும் இயக்கியுள்ளார். பாலிவுட்டில் ஆக்ஷன் படங்கள் கமர்ஷியல் வெற்றிகளை குவித்துக் கொண்டிருக்க, தனது கலைரீதியான எதார்த்த படங்களின் மூலம் மக்கள் மற்றும் திரை ஆர்வலகர்களின் கவனத்தை கவர்ந்தவர். அமிதாப் பச்சன், ராஜேஷ் கன்னா, தேவ் ஆனந்த், மிதுன் சக்ரவர்த்தி போன்ற சூப்பர் ஸ்டார்கள் அனைவரையும் அவர் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாசு சாட்டர்ஜியின் மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு அவரது நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் திரை உலகைச் சேர்ந்த பலரும் ஆழ்ந்த இரங்கலை சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்