பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.சரண் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே கடந்த ஆகஸ்ட்-14 ஆம் தேதி, எஸ்.பி.பியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியானது. இது அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து எஸ்.பி.பி-யின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.சரண் வீடியோ வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், எஸ்.பி.பி அவர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனை நெகட்டீவ் என வந்திருக்கிறதாக தெரிவித்துள்ளார். மேலும் இப்போது அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதையும் அவர் கூறினார். இந்த தகவல் எஸ்.பி.பியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.