பிரபல திரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மூச்சு திணரல் காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு அவரது குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்தியாவின் இசைக் குயில் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் பாடகி லதா மங்கேஷ்கர் சுமார் 20க்கும் மேற்பட்ட மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா விருது”, “பத்ம பூஷன் விருது”, “பத்ம விபூஷன்” விருதுகள், தேசிய விருது, தாதாசாகேப் பால்கே உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளை வென்று குவித்துள்ளார்.
சமீபத்தில் தனது 90வது பிறந்தநாளை கொண்டாடிய லதா மங்கேஷ்கர், மூச்சு திணரல் காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இதைத் தொடர்ந்து அவர் தரப்பில், மும்பையில் இருந்து கிடைத்த தகவலின்படி, பாடகி லதா மங்கேஷ்கருக்கு இருதய தொற்று ஏற்பட்டதால் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும். தற்போது அவர் வீடு திரும்பி, உடல் நலம் தேறி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.