கமல் பாட்டுக்கு டான்ஸ் ஆடி வைரலான நடிகருக்கு தனது படத்தில் வாய்ப்பு வழங்கப்போவதாக இயக்குநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற அண்ணாத்த ஆடுறார் பாடலை, ட்ரெட்மில் மீது ஆடியபடி நடிகர் அஷ்வின் குமார் ஒரு வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதோடு, நடிகர் கமலே ட்விட் செய்து பாராட்டு தெரிவித்தார். இதை தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன.
இந்நிலையில் இந்த வீடியோவை பார்த்த நடிகையும் இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ''இந்த வீடியோவை பார்க்கும் பொழுது, நம்மிடம் இருக்கும் பயன்படுத்தப்படாத திறமையான நடிகர்களை பற்றி யோசிக்கிறேன். கண்டிப்பாக எனது அடுத்த படத்தில் நீங்கள் இருப்பீர்கள்'' என பதிவிட்டுள்ளார். இதையடுத்து நடிகர் அஷ்வின் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அஷ்வின் குமார் தமிழில் துருவங்கள் பதினாறு மற்றும் சில மலையாள படங்களிலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.