இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப இந்த ஆண்டு மொத்தம் 14 படங்கள் தேர்வு செய்யப்பட்டன.
அதில் கூழாங்கல் திரைப்படம் 94- வது ஆஸ்கார் விருதுக்கான இந்திய பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றது. மேலும் தமிழில் இருந்து ஆரம்பத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டு படங்கள் மண்டேலா மற்றும் கூழாங்கல் ஆகும். இந்தப் பட்டியலில் மலையாளப் படமான ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியான நயாட்டு திரைப்படமும் , வித்யா பாலனின் நடிப்பில் உருவான பாலிவுட் ஷெர்னி திரைப்படமும், விக்கி கவுசால் நடித்த சர்தார் உத்தம் பாலிவுட் படமும் துவக்க பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றன. இந்த 14 படங்களில் இருந்து கூழாங்கல் திரைப்படம் மலையாள இயக்குனர் திரு. ஷாஜி N கருண் தலைமையிலான 15 பேர் கொண்ட தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்பட்டது. இதற்கான திரையிடல் வேலைகள் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்றது.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் வழங்கும் கூழாங்கல் படம், குடிகார தந்தை கணபதி மற்றும் அவரது மகன் வேலு ஆகியோரின் பயணத்தைப் பற்றியது, இவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய தங்கள் மனைவி - அம்மாவை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வரும் போது ஏற்படும் சம்பவங்களின் காட்சி தொகுப்புகளின் ஊடாக மதுரையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமத்தின் வாழ்க்கையைப் பற்றிய செல்லுலாய்ட் பதிவாக இந்த படம் உருவாகி உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், கூழாங்கல் படம், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா 2021 -ல் 50 வது நிகழ்வில் மதிப்புமிக்க 'டைகர்' விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய ஆண்டுகளில் ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சமர்ப்பித்த பட்டியலில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் ஜல்லிக்கட்டு மற்றும் ஜோயா அக்தரின் கல்லி பாய் ஆகியவை அடங்கும். இதுவரை எந்த இந்திய படமும் ஆஸ்கர் விருதை வென்றதில்லை. 2001 ஆம் ஆண்டு அசுதோஷ் கோவாரிக்கரின் 'லகான்' சிறந்த சர்வதேசப் படம் என்ற பிரிவுக்கான பரிந்துரைகளின் இறுதிப் பட்டியலில் இடம்பிடித்த கடைசி இந்தியத் திரைப்படம். மதர் இந்தியா (1958) மற்றும் சலாம் பாம்பே (1989) ஆகியவை இறுதிப் பரிந்துரையில் இடம் பெற்ற மற்ற இந்தியத் திரைப்படங்கள் ஆகும்.
2021 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுகள் மார்ச் 27, 2022 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூழாங்கல் திரைப்படம் ஆஸ்கார் போட்டியில் இருந்து அடுத்த கட்டத்துக்கு செல்லாமல் வெளியேறி உள்ளது. இதனை டிவிட்டரில் வருத்தத்துடன் விக்னேஷ் சிவன் குறித்துள்ளார்.