பயோபிக் இந்திய சினிமாவில் ஒரு அங்கமாக மாறிவிட்டது என்று சொல்லலாம் அந்தளவுக்கு அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் பிற துறைகளில் இருந்து திறமையானவர்களின் வாழ்க்கை கதைகள் திரை வடிவம் பெற்றுள்ளன.
பாலிவுட்டில் டாப்ஸி பன்னு நடிப்பில் பெண் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாறு ‘சபாஷ் மித்து’ என்ற பெயரில் உருவாகிவருகிறது. இதற்கான சிறப்பு பயிற்சியை வீட்டிலேயே டாப்ஸி எடுத்துவருகிறார் என்று படக்குழுவினர் பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில், டோலிவுட்டில் இத்தகைய ஒரு முயற்சி உருவாகவிருக்கிறது. ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணியான பளு தூக்கும் வீராங்கணை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கையை படமாக்கம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
பல இந்திய பெண்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாறு பான்-இந்தியன் திரைப்படமாக உருவாகவிருக்கிறது. எம்.வி.வி சினிமா மற்றும் கோனா பிலிம் கார்ப்பரேஷன் சார்பாக இந்தப் படத்தை எம்.வி.வி சத்தியநாராயணா மற்றும் கோனா வெங்கட் தயாரிக்கிறார்கள். இந்தச் செய்தியை மல்லேஸ்வரியின் பிறந்த நாளான இன்று (ஜூன் 1) அன்று அறிவிப்பதில் பெருமை கொள்வதாக டிவிட்டரில் பதிவிட்டிருந்தனர்
கோனா வெங்கட் எழுதி இயக்கவிருக்கும் இந்தப் படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இந்த அறிவிப்பை பிரபலங்கள் பலரும் ரிடிவீட் செய்து வாழ்த்தி வருகின்றனர். நெட்டிசன்களும் தங்கள் வரவேற்பை தெரிவித்துள்ளனர்.