சென்னை, 09 பிப்ரவரி 2022:- கர்நாடகாவில் பெரும் பிரச்சனையாக திகழ்கிறது ஹிஜாப் விவகாரம். இதுபற்றி நடிகையும் பாஜகவின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளருமான குஷ்பூ தமது ட்விட்டரில் தெரிவித்துள்ள கருத்து பிரபலமாகி வருகிறது.
ஹிஜாப் - காவித்துண்டு
கர்நாடகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்ததும், அதற்கு பள்ளி நிர்வாகம் தடை விதித்ததும், அடுத்த கட்டமாக காவித் துண்டு அணிந்து இந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட விஷயமும் நாட்டையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இத பதட்டத்தையும், பரபரப்பையும் தணிக்க அம்மாநில கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
அரசியல் செய்பவர்கள் வெட்கப்பட வேண்டும்
இதனிடையே இதுபற்றி ட்விட்டரில் தெரிவித்துள்ள, நடிகை குஷ்பூ “கல்வி மதம் சார்ந்தது அல்ல, சமத்துவம் குறித்தது. பள்ளியில் சீருடை அணிந்தது தொடர்பில், விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என நான் நம்புகிறேன். கல்வி நிலையங்கள் மதத்தைக் காட்டுவதற்காகவோ, பலத்தைக் காட்டுவதற்காகவோ அல்ல. இதில் அரசியல் செய்பவர்கள் வெட்கப்பட வேண்டும். நம் பள்ளி நாட்களில் நாம் எப்படி இருந்தோமோ, அப்படியே இப்போதும் எப்போதும் போல் ஒன்றாக இருக்க வேண்டும்.” என பேசியுள்ளார்.
மதத்தை ஏன் பேட்ஜாக அணிய வேண்டும்?
மேலும் தனது பள்ளி நாட்களில் சீருடையைத் தவிர தான் வேறு எதையும் அணிந்த குழந்தைகளை பார்த்ததில்லை என்று குறிப்பிட்டுள்ள குஷ்பூ, பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதத்தை பேட்ஜாக அணிய வேண்டும் என்கிற திடீர் தூண்டுதல் எதற்காக? என கேள்வி எழுப்பிய குஷ்பு, சரஸ்வதி அறிவின் சின்னம், எனவே சில பள்ளிகளில் இருக்கும் அந்த சிலைகள் அகற்றப்படுமா என்று கேட்பவர்கள், தயவு செய்து உங்கள் அறியாமையை வெளிக் காட்ட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏன் சரஸ்வதியை ஏற்கவில்லை?
குஷ்பூ தமது இன்னொரு ட்வீட்டில், “இயேசுவை கான்வென்ட்டில் ஏற்கும்போது அல்லாஹ்வை மதர்சாவில் ஏற்கும்போது, ஏன் சரஸ்வதியை ஏற்கவில்லை? ஏன் இந்த பாரபட்ச அணுகுமுறை? பள்ளி என்பது ஒரு மதமோ, நீங்கள் என்ன அணிய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் இடமோ அல்ல. அது ஒழுக்கம் நிறைந்த இடம். கற்றலில் ஒற்றுமையையும் மரியாதையையும் காட்ட ஒரு விதியைக் கொண்டிருக்க வேண்டிய இடம் அது.” என்று தெரிவித்துள்ளார்.
அவங்கள ஒற்றுமையா இருக்க விடாதீங்க - அது அரசியல் இல்ல
பின்னர் உடை குறித்து பேசிய குஷ்பூ, “வெளியில் நீங்கள் உடுத்துகிறீர்கள் என்பது உங்கள் விருப்பம். ஆனால் பள்ளிகளில் விதிகளையும் கற்றலையும் மதிக்க வேண்டும். எம்மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் நம் குழந்தைகள் நமது பெருமை. அவர்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் ஏன் தயங்குகிறார்கள்? ஒரு கையால் தட்டினால் ஓசை வராது. அந்த குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதாக எண்ணி அவர்களை ஒருவரையொருவர் ஒற்றுமையாக இருக்க வைக்க வேண்டாம். ஏன்ன்றால் அதெல்லாம் அரசியலாக இருக்க முடியாது.” என சர்க்காஸ்டிக்காக பேசினார்.
குஷ்பூ என்னும் நகத்கான்
நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சியின் மனைவியான குஷ்பூ, 90களின் பிரபல ஹீரோயின். அண்மையில் ரஜினி நடித்த அண்ணாத்த படத்தில் நடித்து கலக்கியிருந்தார். உண்மையில் நடிகை குஷ்பூ பிறப்பால் முஸ்லீம் தான் என்பதை பலரும் அறியமாட்டார்கள். ஆம், அவரது உண்மையான பெயர் நகத்கான். இந்த பெயரை தற்போது தமது ட்விட்டரில் நடிகை குஷ்பூ தெரியப்படுத்தியும், இந்த கருத்துக்களை கூறியும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.