இயக்குநர் பேரரசு நடிகர் விஜய் உட்பட முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்கியவர். இவரது இயக்கத்தில் நடிகை குஷ்பு, பழனி எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
அண்மையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், இயக்குநர் வெற்றிமாறனின் கருத்து குறித்து இயக்குநர் பேரரசுவும், நடிகை குஷ்புவும் ஒரே பார்வையை முன்வைத்தனர். இந்நிலையில் தற்போது நடிகை, தயாரிப்பாளர், அரசியல் ஆளுமை என பன்முகம் கொண்ட நடிகை குஷ்பு குறித்து இயக்குநர் பேரரசு பேசியுள்ளார். சென்னையில் நடந்த ஒன் வே திரைப்பட விழாவில் தான் இயக்குநர் பேரரசு குஷ்பு குறித்து பேசியுள்ளார்.
அவர் பேசும்போது, “ஆணுக்கு நிகர் பெண் என்கிறார்கள். ஆணுக்கு நிகர் பெண் என்பது டாக்டர் ஆவது, வக்கீல் ஆவது, நீதிபதி ஆவது, அட்டோ ஓட்டுவது, ஃபிளைட் ஓட்டுவது இதெல்லாம் இல்லை. ஒரு பெண்ணுக்கு ஆணுக்கு நிகரான மனோதிடம், தைரியம் எந்த பெண்ணுக்கு இருக்கிறதோ, அவங்கதான் ஆணுக்கு நிகர். அது எங்கே இருக்கும் என்றால், ஒரு பிஸினஸ்ல்யோ, எதுலயுமே இருக்காது. எந்த பெண் அரசியலுக்கு வராங்களோ, அவங்களுக்கு அந்த மனோதிடம் இருக்கும்.
இந்திரகாந்தி அம்மையாரை இன்றுவரை இரும்பு பெண்மணி என்கிறோம், முன்னாள் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா அம்மையார், அவங்களை பெண் சிங்கம் என்போம், ஒரு மம்தா பேனர்ஜி, இந்த மாதிரி அரசியலில் வரும் பெண்கள்தான் மனோதிடத்தில் ஆணுக்கு நிகர். அந்த வரிசையில் குஷ்பு மேடமும் இருக்கிறார். அரசியலில் அவ்வளவு சவலாக, தைரியமாக இருக்கிறார். அவரது தைரியத்தை பாராட்ட வேண்டும்.
குஷ்பு மேடத்தின் வளர்ச்சிலாம் சும்மா இல்லை. எல்லா நடிகைகளும் அப்படி ஆகிவிட முடியாது. தான் செய்யும் தொழிலில் யார் உண்மையாக ஈடுபாட்டுடம் இருக்கிறாரோ, அவரை ஆண்டவர் தானாகவே அடுத்த வரிசைக்கு கொண்டு செல்வார். குஷ்பு மேடத்துக்கு தாய் மொழி தமிழ் இல்லை. இன்னைக்கு தமிழ் பேசுபவர்களை விட அவங்க பேசுவதுதான் தெளிவாக இருக்கும். வடமொழியில் இருந்து வந்த ஒருவர் இன்று தமிழ் அரசியல் மேடையில் பேசும் அளவுக்கு தன்னை வளர்த்திருக்கிறார்.” என்று குறிப்பிட்டார்.