கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பெண்குயின்'. அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் எழுதி இயக்கியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
வெகு நாள் கழித்து திரையில் ஒரு பெண் மையக் கதாபாத்திரம். அதுவும் தாய்மையின் சிறப்பை மிக வித்யாசமான கோணத்தில் சொல்லியிருக்கிறது பெண்குயின். ஒட்டுமொத்த படத்தையும் தன் தோள்களில் தாங்கி நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக தேனீக்களைப் பார்த்தவுடன் apiphobia எனப்படும் பயம் கலந்த அலர்ஜி மனநிலையை மிகத் துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கிறார். மட்டுமல்லாமல் அந்த முகத்தில் தென்படும் அமைதியும், ஆழமும், காணாமல் போன மகன் கிடைத்துவிட வேண்டும் என்ற துடிப்புமென ரிதம் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அவரது திரையுலக வாழ்க்கையில் இது மிக முக்கியமான படம் என்றால் மிகையில்லை.
இந்தப் படத்தில் ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் என எல்லா விஷயங்களும் வெகு சிறப்பாக அமைந்திருந்தாலும் ஏதோ ஒன்று மிஸ்சிங் என்று பார்வையாளர்களுக்கு தோன்றக் கூடும். காரணம் இந்தப் படம் தியேட்டரில் வெளியாக இருக்க வேண்டும். மனதை அதிர வைக்கும் இசைதான் த்ரில்லர் படங்களின் உயிர்நாடி. சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்தின் ஜீவனை இசையாக கோர்த்திருக்கிறார். ஆனால் அது சின்னத்திரையில் அந்தளவுக்கு கடத்தப்படவில்லை.
சில இடங்களில், குறிப்பாக படத்தின் முற்பகுதில், மனம் அதிரும் வகையில் சில இடங்களில் இசை இருந்திருக்க வேண்டும், ஆனால் மென்மையாகவும், ஃபேண்டஸி காட்சிகளுக்கென அமைக்கப்பட்டிருந்தது போல இருந்தது. இந்த முரண் தன்மை பெரிய திரையில் பார்க்கும் போது மனதுக்குள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் துரதிர்ஷடவசமாக சின்னத்திரையில் அது வொர்க் அவுட் ஆகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். படத்தின் பிற்பாதியில் மிரட்டலான இசை பார்வையாளர்களை உறைய வைக்கத் தவறவில்லை.
மற்றபடி படம் மிகவும் க்ரிப்பாகவும், கடைசி வரை சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் படங்களிலுள்ள கூறுகளை துல்லியமாக உள்ள்வாங்கியும் உருவாகியுள்ளது சிறப்பு. மற்ற கதாப்பாத்திரங்களான லிங்கா, மாதம்பட்டி ரங்கராஜ், மதி, நித்யா கிருபா, மாஸ்டர் அத்வைத் உள்ளிட்டோர் தங்கள் வேடங்களுக்கு உரிய நியாயம் செய்திருக்கின்றனர். குறிப்பாக சைரஸ் என்ற வேடத்தில் நடித்த மேடி என்ற லேப்ரடார் பிரம்மிக்கச் செய்துவிட்டது. எந்த தளத்தில் பார்த்தால் என்ன, வெகு நாள் கழித்து ஒரு செம த்ரில்லிங் படத்தை பார்த்த நிறைவை தருகிறது பெண்குயின்.
இந்தப் படத்தின் விரிவான ரெவ்யூவை பார்க்க