நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி அமோக வெற்றி பெற்ற ‘மகாநடி/நடிகையர் திலகம்’ திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதில் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை தத்ரூபமாக கண் முன் நிறுத்திய நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பு ரசிகர்களை ஈர்த்ததுடன் அவருக்கு பாராட்டுக்களையும் பெற்று தந்தது.
இப்படத்தில் நடித்து தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் தனது மகிழ்ச்சியை அறிக்கை வெளியிட்டு பகிர்ந்துள்ளார். அதில், “மகாநடி திரைப்படத்திற்கு நேர்மறையாக விமர்சனங்களையும் எல்லையற்ற பாராட்டுக்களையும் தெரிவித்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி. இப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், தொழில்நுட்ப கலைஞர்கள், சக நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. அவர்களின் பங்களிப்பு இல்லை என்றால் ‘மகாநடி’ முழுமையடைந்திருக்காது”.
“சாவித்ரி அம்மாவின் உலகத்தை அறிய தங்களை அர்ப்பணித்துக் கொண்ட படக்குழுவிற்கு எல்லாவற்றிற்கும் மேலாக அவரது ஆசிர்வாசதம் இருந்தது பெரும் பலமாக கருதுகிறேன். இப்படம் 3 தேசிய விருதுகளை வென்றதில் பெரும் மகிழ்ச்சி”.
“எனது குடும்பத்தினருக்கும், எனது குரு பிரியதர்ஷனுக்கும், நலம் விரும்பிகள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது நன்றிகள். இப்படத்திற்காக விருது வென்ற காஸ்டியூம் டிசைனர் கவுரங் ஷா, அர்ச்சனா ராவ், இந்திராக்ஷி பட்நாயக் மாலிக் உள்ளிட்ட வெற்றியாளர்களுக்கு நன்றி”.
“தேசிய விருது வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ‘மகாநடி’ திரைப்படத்திற்கு அங்கீகாரம் அளித்து கவுரவித்த ஜூரி உறுப்பினர்களுக்கு நன்றி” எனவும் குறிப்பிட்டுள்ளார்.