நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஆதார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழர் திருநாளான பொங்கலன்று இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் மும்மரமாக ஈடுபட்டு வந்த கருணாஸ் தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். அவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் 'ஆதார்'. இப்படத்தை 'அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்' ஆகிய படங்களை இயக்கிய ராம்நாத் பழனிகுமார் இயக்கி வருகிறார். படத்தில் கருணாஸுக்கு ஜோடியாக நடிகை ரித்விகா நடிக்கிறார்.
இவர்களுடன் நடிகர் அருண்பாண்டியன், திலீபன், 'பாகுபலி' பட நடிகர் பிரபாகர், நடிகை மனிஷா யாதவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீ காந்த் தேவா இசையமைக்கும் இப்படத்திற்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை கவிஞர் யுரேகா எழுத, 'அசுரன்' புகழ் ராமர் படத்தை தொகுத்திருக்கிறார். தேசிய விருது பெற்ற கலை இயக்குநரான சீனு படத்தின் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். ஆதார் படத்தை வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.
அருண் பாண்டியன்
தமிழ் சினிமாவின் அர்ணால்ட் என்று அழைக்கப்பட்டவர் அருண்பாண்டியன். 80களில் ஆக்சன் ஹீரோக்களில் இவரும் ஒருவராக வலம் வந்தார். நடிகர் இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி தான் தொடாத துறைகளே கிடையாது. தற்போது அயங்கரன் இன்டர்நேஷனல் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் இவரும் அவரது மகள் கீர்த்தி பாண்டியனும் சேர்ந்து நடித்திருந்த அன்பினிற்கினியாள் திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. தற்போது ஆதார் படத்தில் இணைந்துள்ளார்.
திலீபன்
குத்தூசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் திலீபன். முதல் படம் வெற்றி பெறவில்லை என்றாலும் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இன்றும், காதல் காட்சிகளை பலரும் ரசித்து கொண்டிருக்கின்றனர். காலாவில் ரஜினிக்கு மகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஹீரோ என்று இல்லாமல் கிடைத்த கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ரைட்டர் திரைப்படத்தில் தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் திலீபன். தற்போது ஆதார் படத்தில் கருணாஸூடன் இணைந்து நடித்து வருகிறார்.
கருணாஸ்
லொடுக்கு பாண்டியாக அறிமுகம் கிடைத்தாலும் சரியாக பயன்படுத்திக் கொண்டவர் கருணாஸ். காமெடியனாக மட்டும் இல்லாமல் நாயகனின் நண்பன், அண்ணன், சித்தப்பா, மாமா, பல்வேறு முகங்களாக சிரிக்கவும் வைத்து குணச்சித்திர வேடங்களில் மக்களை கண்ணீர் விட்டு அழவைத்துள்ளார். இசை, பாட்டு சினிமா என்று இருந்தவர் அரசியலில் கால் பதித்து எம்எல்ஏ என வெற்றியும் கண்டுள்ளார்.
சமுத்திரக்கனியுடன் சங்கத்தலைவன் படத்தில், இயல்பான ஒரு இளைஞனாக கோபப்பட தெரியாத பயந்த சுபாவத்து நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். தற்போது, மீண்டும் நாயகனாக முகம் காட்டும் கருணாஸ் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
பர்ஸ்ட் லுக்
ஆதார் படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர்கள், படத்தின் போஸ்டர்கள் இன்றைய இளைஞர்களுக்கு கதை சொல்ல ஆரம்பித்துவிட்டன. ஆதார் தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு கொண்டு சொல்லும் என்ற நம்பிக்கையை படக்குழுவினர் விதை்துள்ளனர். இந்திய திரை சிற்பி சத்யஜித்ரேவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வெளியான ஆதார் பட போஸ்டர் மேலும் படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், பொங்கல் திருநாளான இன்று இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டார்.
ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் கருணாஸின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்து வருவதால் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.