எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் வி.மதியழகன், எஸ்.ரவிச்சந்திரன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ' கள்ளன்'.
இதில் இயக்குநர் கரு.பழனியப்பன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ‘தோழா’ படத்தில் கார்த்தியின் தங்கையாக நடித்த நிகிதா நடித்துள்ளார். இவர்களுடன் வேலா ராமமூர்த்தி, நமோ நாரயணன், செளந்தர்ராஜா, ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன், ரெஜின், பருத்திவீரன் முருகன், அருண், மாயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தைப் பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான சந்திரா தங்கராஜ் இயக்கியுள்ளார். இவர், இயக்குனர் அமீர், 'கற்றது தமிழ்' ராம் இருவரிடம் பல்வேறு படங்களில் உதவியாளராக இருந்தவர். சூரரைப் போற்று திரைப்படத்தில் பணிபுரிந்த இவர், சூர்யாவின் குணநலன் குறித்த நெகிழ்ச்சி பதிவையும் தம் வலைப்பக்கத்தில் முன்னதாக பகிர்ந்திருந்தார்.
எண்பதுகளின் இறுதிக் காலகட்டத்தில் நடக்கிற மாதிரியான காலகட்டத்தைக் கொண்ட 'கள்ளன்' திரைப்படம் வருகிற ஜனவரி மாதம் திரைக்கு வரவிருக்கிறது. அதற்கான அறிவிப்பு கடந்த வாரம் வெளியான நிலையில் பல்வேறு சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தும், தனிப்பட்ட முறையில் இயக்குனர், தயாரிப்பாளர் ஹீரோ மூவருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் தொடந்து செயல்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், தனது வலைத்தளத்தில், 'கள்ளன்' படத்தின் டீஸரை வெளியிட்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
இதனைத்தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், படத்தின் டைட்டிலுக்கு எதிர்ப்பு கிளம்பிருப்பது குறித்து பேசிய இயக்குனர் சந்திரா தங்கராஜ், “இந்தக் கதைக்கு இப்படியொரு டைட்டில்தான் பொருத்தமாக இருக்கும் என்பதால்தான் வைத்தோம். இது எந்த ஜாதியையும் முன்னிலைப் படுத்தி எடுக்கப்பட்ட ஒரு ஆக்சன் த்ரில்லர் படம் அல்ல. வேட்டை சமூகத்தில் பிறந்து வளர்ந்த ஒருவன், இனிமேல் வேட்டையாடக்கூடாது என்று தடை போட்ட பிறகு வறுமையின் காரணமாக வாழ்க்கையில் ஒரே ஒரு தவறு செய்யும் சூழலுக்குத் தள்ளப்படுகிறான். அது அவன் வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிடுகிறது. வாழ வழியில்லாமல் அவனும், அவனது நண்பர்களும் ஓடுகிற ஓட்டத்தில் கடைசியில் 'அறம்'தான் ஜெயிக்கும் என்பதைப் பரபரப்பாகச் சொல்லுகிற ஒரு கமர்ஷியல் படம்தான் இது.
வேட்டை சமூகம் என்பது எல்லா ஊரிலும், நாட்டிலும் இருக்கக் கூடியதுதான். நான் பார்த்த ஒரு வாழ்க்கையை நெருக்கமாகச் சொல்லியிருக்கேன். மக்களின் வாழ்வியலைச் சொல்லும் படமாக மட்டும் இன்றி, நல்ல கருத்தை மக்களுக்கு சொல்லும் ஒரு கமர்ஷியல் படமாகவும் இப்படம் இருக்கும். அதே சமயம், படத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் மக்கள் மனதில் பெரிய இடம் பிடிப்பார்கள். குறிப்பாக படத்தில் வரும் இரண்டு பெண் கதாப்பாத்திரங்கள் பெரிதும் பேசப்படும். படத்தில் வேட்டையாடும் காட்சிகள் நிறைய இருக்கின்றன. அவற்றை கிராபிக்ஸ் மூலம் தான் படமாக்கினோம். ஆனால், அது கிராபிக்ஸ் என்று தெரியாதவாறு மிக நேர்த்தியாக இருக்கும். அதனால் தான் கொஞ்சம் காலதாமதமும் ஆனது.
இதில் எந்த இடத்திலும் ஜாதிய குறியீடோ, வசனமோ இருக்காது. யாருடைய மிரட்டலுக்கும் பயந்து டைட்டிலை மாத்துகிற எண்ணம் இல்லை. இந்த விளக்கத்தை எதிர்ப்பு தெரிவிப்பவர்களிடம் கூறிவிட்டோம். அதையும் தாண்டி எதிர்ப்பவர்கள் படத்தை பார்த்த பிறகு நிச்சயம் எதிர்க்க மாட்டார்கள். அதே சமயம், நீதிமன்றமோ அல்லது தணிக்கை குழுவோ இந்த தலைப்பை மாற்ற சொன்னால், நிச்சயம் வேறு ஒரு தலைப்பு வைக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். மற்றபடி, வேறு யாருடைய மிரட்டலுக்கும் அடிபணிய மாட்டோம்.” என்றார்.
அடுத்து பேச வந்த தயாரிப்பாளர் மதியழகன், “இந்த மன உறுதிதான் இவங்ககிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது” என்று ஆரம்பித்தார். தொடர்ந்து பேசும்போது, “பெண் இயக்குனர்கள் அதிகமாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து இயங்குவதில் சிக்கல் இருக்கிறது. ஒரு சிலர் மட்டுமே அதையும் தாண்டி ஜெயிக்கிறார்கள். அந்த வரிசையில் ஒரு பெண் இயக்குனராக இந்த படத்தில் சந்திரா நிச்சயமாக வெற்றி பெறுவார்.
ஒரு எழுத்தாளர் எப்படிப் படம் எடுப்பாரோ அந்த வகையில் இந்தப் படம் அமைந்திருக்கிறது. நீங்கள் பல படங்களைத் தயாரித்து வெளியிடுகிறீர்கள். ஆனால் என் படத்தை மட்டும் ஏன் இன்னும் வெளியிடவில்லை என்று சந்திரா கேட்டுக்கொண்டிருந்தது என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அதற்கான வேளையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்தப் படம் பற்றி செய்திகள் வரும்போதெல்லாம் இந்த தலைப்பை மாற்ற சொல்லி நிறைய மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தின் தலைப்பு, திருடன் என்ற பொருளிலேயே வைக்கப்பட்டுள்ளது. ஒரு சமூகத்தைக் குறிப்பிடுவதாக நிச்சயமாக இல்லை. அதைப் படம் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்” என்றார்.
கே இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில், நா.முத்துக்குமார், யுகபாரதி, சந்திரா தங்கராஜ் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். ஒளிப்பதிவினை எம்.எஸ்.பிரபு, கோபி ஜகதீஸ்வரன் மேற்கொண்டுள்ளனர்.