தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக கால் பதித்து பல முன்னணி நடிகர்களுடன் வரை பணிபுரிந்துள்ளவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
குறும்படங்கள் இயக்கி மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்ற கார்த்திக் சுப்புராஜ், பீட்சா படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அவர் இயக்கிய ஜிகர்தண்டா திரைப்படம், பெரிய அளவில் அவரை ஹிட் இயக்குனராக மாற்றியதுடன் படத்தில் நடித்த பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதையும் வாங்கி கொடுத்தது.
இதன் பின்னர், பிரபுதேவா நடிப்பில் மெர்குரி, ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட, தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம், விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவான மஹான் உள்ளிட்ட சில திரைப்படங்களையும் கார்த்தி சுப்புராஜ் இயக்கி உள்ளார். இயக்குனர் மட்டுமில்லாமல், தயாரிப்பாளராகவும் சில படங்களை அவர் தயாரித்தும் வருகிறார்.
மஹான் படத்தை இயக்கி இருந்த கார்த்தி சுப்புராஜ், அடுத்ததாக ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அப்படி ஒரு சூழலில், தற்போது இது தொடர்பான போஸ்டர் ஒன்றையும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது வெளியிட்டுள்ளார்.
"Jigarthanda Double X" என குறிப்பிட்டு, இரண்டு துப்பாக்கிகள் சேர்ந்து யானையின் முகம் போன்றும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. Vintage வகையில் இந்த போஸ்டர் இருக்கும் நிலையில், ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தின் டீசர் போல வீடியோ ஒன்று, இன்று (11.12.2022) மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படங்களில் மிக முக்கிய திரைப்படமான ஜிகர்தண்டா பார்க்கப்படும் நிலையில், அதன் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பும் வெளியாக உள்ளதால், ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இதனை எதிர்நோக்கி வருகின்றனர்.